(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் கடந்த ஜுன் மாதத்தில் ஓரளவு முன்னேற்றகரமான நிலையைப் பதிவுசெய்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டினதும் கொள்வனவு முகாமைச் சுட்டெண்கள் கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவிற்கு இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் வியாபார நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருந்த நிலையில் கொள்வனவு முகாமைச் சுட்டெண்ணில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமானது தயாரிப்பு செயற்பாடுகள் கொவிட் - 19 தொற்றுக்கு முன்னரான மட்டத்தை நோக்கிச்செல்வதை அறியமுடிகின்றது.

உற்பத்தி கொள்வனவு முகாமைச்சுட்டெண் கடந்த ஜுலை மாதம் 64.6 ஆக பதிவாகியிருப்பதுடன், இதற்கு புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச்சுட்டெண்களின் விரிவடைதலே முக்கிய காரணமாக அமைந்ததாக மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

அதேவேளை கடந்த ஜுலை மாதத்தில் சேவை கொள்வனவு முகாமைச்சுட்டெண் 51.4 ஐ அடைந்ததன் ஊடாக, சேவைகள்துறை தொடர்ந்து இரண்டாவது மாதமாகவும் விரிவடைந்திருக்கிறது. எனவே கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த சேவைகள்துறை ஜுன் மாதத்தில் குறிப்பிடத்தக்களவான மீட்சியைப் பதிவுசெய்திருப்பதுடன் புதிய வியாபாரங்களில் ஏற்பட்ட விரிவாக்கம் இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.