(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் முன்னெடுக்கக் கூடிய அதிகபட்ச வேலைத்திட்டங்களை  முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதோடு, கேகாலை மாவட்டம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் காணப்படும் பெருந்தோட்ட பிரதேசங்களில் அவற்றின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்று பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சில் நேற்று திங்கட்கிழமை கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

இன்றைய தினம் மிக முக்கியமானதொரு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாகவே எண்ணுகின்றேன். எமது நாட்டில் வெளிநாட்டு வருமானம் பெருமளவு பெற்றுக் கொள்ளப்படும் ஒரு துறையாக பெருந்தோட்டத்துறை காணப்படுகிறது. இந்த முக்கியத்துவமுடைய துறையில் எமக்கும் பொறுப்புக்களை வழங்கியமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் முன்னெடுக்கக் கூடிய அதிகபட்ச வேலைத்திட்டங்களை  முன்னெடுக்க  எதிர்பார்த்துள்ளதோடு , கேகாலை மாவட்டம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் காணப்படும் பெருந்தோட்ட பிரதேசங்களில் அவற்றின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு மற்றும் இறப்பர் உற்பத்தி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை கேகாலை மாவட்டத்தைப் போன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

தேயிலை உற்பத்தியை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் குழுவாக அமைச்சர் ரமேஷ் பத்திரன , இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ , ஜானக வக்கும்பர ஆகியோருடன் இணைந்து பெருந்தோட்டத்துறையைக் கட்டியெழுப்புவதற்காக செயற்படுவோம். அந்த பொறுப்பை ஏற்று நாம் செயற்படுவோம்.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில் கேகாலை மாவட்டமும் உள்வாங்கப்படும் என்றார்.