வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமையவேண்டும் என்பது குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பிற்கான வாக்கெடுப்பில்; 21 மக்கள் பிரதிநிதிகள் ஓமந்தையில் அமைவதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு 5 மக்கள் பிரதிநிதிகள் எதிராக வாக்களித்னர்.  மேலும் 14பேர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. அந்தவகையில்  ஓமந்தைக்கு  அதிக ஆதரவு கிடைத்துள்ளது.  

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் ஆகியோரும் வடக்கு முதல்வர் சி.விக்கினேஸ்வரன் உள்ளடங்கலாக 18 மாகாணசபை உறுப்பினர்களும் ஓமந்தைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  

சிவமோகன், சாந்திஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்  உட்பட மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் தாண்டிக்குளத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முன்னதாக பொருளாதாரத்தை வலுபடுத்தும் நோக்கில் நாடாளாவிய ரீதியில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அரசாங்கம் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வுனியாவில் அமைப்பதற்காக 200மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது. 

அதேநேரம் 2010ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி அப்போதைய ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையில் நடைபெற்ற வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்பொது ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்திற்கு அண்மையாகவுள்ள காணியில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் அண்மைய காலத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டுமென்ற கருத்துக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் மேலெழுந்திருக்கின்றன. இதனால் கூட்டமைப்பினுள் இரண்டு கருத்துக்கள் எழுந்தமையினால் சர்ச்சைகள் எழுந்திருந்தன.

அதேநேரம் ஓமந்தையிலேயே அமையவேண்டுமென இப்பகுதி தொடர்பாக ஆராய்ந்த நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததோடு வடமாகாண விவசாய அமைப்புக்களும், புத்திஜீவிகளும் வலியுறுத்த ஆரம்பித்தனர். 

இவ்வாறான நிலையில் கடந்த 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது. இக்கூட்டத்தின் போது பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து ஜனநாயக அடிப்படையில் முடிவொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடத்தில் கருத்துக்கணிப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கிடையில்  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றிருந்தது. 

இக்கூட்டத்தில் ஓமந்தையிலேயே அமையவேண்டுமென பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்குரிய இடங்களை பார்வையிடுவதெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் விசேட சந்திப்பைச் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று ஓமந்தைக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா எம்.பி ஓமந்தை மற்றும் தாண்டிக்குளத்தில் உள்ள காணிகளை நேரில் பார்வையிட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு முதல்வர் சி.வி.யைச் சந்தித்திருந்தார்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாக நீண்ட கலந்தரையாடல் இடம்பெற்றிருந்தது. முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஓமந்தையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்கான காரணங்களை தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் நீங்களே இறுதி முடிவெடுங்கள் என முதல்வர் விக்கினேஸ்வரனிடம் மாவை.சேனாதிராஜா எம்.பி பொறுப்பை ஒப்படைந்திருந்ததோடு நாளை புதன்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனை விக்கினேஸ்வரன் நேரில் சந்திக்கும்போது இறுதி முடிவை எடுத்து பகிரங்கப்படுத்துவதெனவும் கூறியிருந்தார். 

இவ்வாறிருக்கையில், ஏற்கனவே எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்வதற்காக வடமாகாணத்தின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 29 வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் பதிவுத்தபால் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தார்.

நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்திருந்த நிலையில் சிறிதரன், சித்தார்த்தன், சிவசக்தி அனந்தன், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராஜா, சிவமோகன் ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு முதல்வர் உட்பட 21மாகாண சபை உறுப்பினர்களும் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். 

அதன் பிராகரம் சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் ஆகிய எம்.பிக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்தலைமையிலான வடக்கு மாகாண சபை குழு, விவசாய அமைப்புக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திய ஓமந்தை பகுதிக்கே பெரும்பான்மை கிட்டியுள்ளது. இதனையடுத்து வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்த சர்ச்சைக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.