(ஆர்.யசி)

பொது மக்களின் காணி அபகரிப்பு மற்றும் அரச காணி ஆக்கிரமிப்பு போன்ற  கடந்தகால செயற்பாடுகள் குறித்து புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும்  உள்ளக பாதுகாப்பு , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரிவித்தார். காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Image may contain: 12 people, people sitting

 நீர்பாசன துறை அமைச்சு மற்றும்  உள்ளக பாதுகாப்பு , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக நேற்று கடமை பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சமல் ராஜபக் ஷ இந்த விடயங்களை கூறினார், 

அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது மிகவும்  முக்கியமானதாகும், அதேபோல் உள்ளக பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 

எனினும் பழைய சட்ட திருத்தங்களுக்கு அமைய இவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது. எனவே இந்த அரசாங்கம் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவரும். இவை அனைத்துமே மக்கள் நலன் கருதியதும், மக்கள் பக்கம் இருந்து சிந்திக்க வேண்டியதுமான  விடயங்களுமாகும். அதேபோல் நாட்டில் காணி பிரச்சினை உள்ளது. பொதுமக்களுக்கான காணி உரித்துக்கள் வழங்கப்பட வேண்டும், அதேபோல் பொதுமக்களின் காணி அபகரிப்பு தடுக்கப்படவும் வேண்டும்.

மேலும் அரச காணி அபகரிப்பும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளது. அவற்றை நிறுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச காணிகளை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதேபோல் பொதுமக்களின் காணிகளை சூறையாடும் நிலைமையும் இருந்தது. 

தெற்கில் அது குறித்த பல முரண்பாடுகள் எனக்கு கிடைக்கப்பெற்றது. எனவே இப்போது நாம் புதிதாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. எனினும் இந்த விடயத்தில் மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை முதலில் கருத்தில் கொண்டு செயற்படவே அரசாங்கம் விரும்புகின்றது. இதன்போது விவசாய பூமிகளை பாதுகாக்க வேண்டும், அதேபோல் நவீன தொழிநுட்ப திட்டங்களுடனும் நாம் பணியாற்றியாக வேண்டும். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும்

Image may contain: 5 people, people standing, people sitting and indoor

கேள்வி:- யுத்தத்திற்கு பின்னராக வடக்கு கிழக்கு காணி அபகரிப்புகள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படுமா?

பதில்:- அணைத்து பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். காணி விடயத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காரணிகள் என்ன என்பதை விடவும் மக்களின் காணிகள் குறித்த பிரச்சினைகள் இருப்பின் அவற்றை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.