சட்ட விரோதமாக போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து கட்டார் - டோகா விமான சேவை மூலம் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பெண் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் - கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கட்டார் விமானசேவை விமானம் மூலம் டோகா சென்று அங்கிருந்து இத்தாலி செல்வதற்காகவே இவ்வாறு போலிக் கடவுச்சீட்டை குறித்த பெண் தன்வசம் வைத்துள்ளார். குறித்த பெண்ணிடமிருந்த சந்தேகத்திற்கிடமான இத்தாலிக்கான வீசா அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் கட்டார் விமான சேவை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளிலேயே போலித்தகவல்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் தகவல்களையும் தனது புகைப்படத்தையும் பயன்படுத்தியே குறித்த சந்தேக நபர் போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா அனுமதிப்பத்திரத்தைத் தயாரித்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.