(நா.தனுஜா)

ஏழைகளுக்கு உதவும் நோக்கிலும் வறுமையை ஒழிக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட நுண் கடன் திட்டம் இன்றளவில் ஏழைகளை வறுமைச்சுழலுக்குள் தள்ளும் பொறியாக மாறியிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இத்தகைய நுண் கடன் வழங்கல் நிதிநிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி, கல்வித்துறைக்கான நிதியொதுக்கீடு, நுண் கடன் நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

உலகலாவிய ரீதியில் பொருளாதார மந்தநிலையொன்று தோன்றியிருப்பதுடன் அதன் எதிர்மறையான விளைவுகளை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறானதொரு நெருக்கடிநிலையில் எமது நாட்டிற்குப் புகழைக்கொண்டுவந்து சேர்த்த கல்விக்கு குறைந்தளவான நிதியை ஒதுக்குவது இயல்பானதாகும். எனினும் நிதி ஒதுக்கிட்டு மாற்றம் கல்வித்துறையைப் பாதித்துவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்தோடு கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி, உண்மையில் அதன் பெருமளவு துணைபுரியும் என்பதுடன் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிக முகவர்களும் பயனடைவார்கள். கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதாக இது அமையும் என்றாலும், தொடர்ந்தும் நிதிச்சமநிலையைப் பேணுவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் பொருளாதார செயற்பாடுகளின் மற்றொருபுறம் நுண் கடன் என்பது ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதொன்றாகும். எனினும் தற்போது அது வறுமை என்ற பெரும் நெருக்கடிக்குள் ஏழைகளைத் தள்ளியிருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். இத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தும் நிதிநிறுவனங்களின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.