நடிகை  தீபிகா படுகோன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது என்ன செய்தார்? என்பதை தனது பேஸ்புக் அபிமானிகளுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் கதாநாயகளில் பிரபலமானவர் தீபிகா படுகோன்(30). தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என்ன செய்தார்? என்பதை அவர் தனது பேஸ்புக் அபிமானிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். மன அழுத்தத்துக்குள் நான் மூழ்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த நிலையில் இருந்து வெளியேற கடுமையாக போராடினேன். அந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற நிலையில் தவித்தேன்.

ஆனால், எனது அப்போதைய நிலையை போராடி வெல்லும் பலத்தை எனக்குள் இருந்த ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய ஆற்றல் ஊக்குசக்தியாக அமைந்தது. பேட்மின்டன் விளையாட்டு தெரிந்திருந்ததால் தோல்விகளை கையாள மட்டுமின்றி, வெற்றியை கையாள்வது எப்படி என்பதையும் விளையாட்டு கற்றுத் தந்தது. எனக்கு பணிவையும், அடக்கத்தையும் அது கற்றுத் தந்தது.

எந்த நிலையிலும் இருந்து மீள்வது எப்படி? எதையும் எதிர்த்து போராடுவது எப்படி? என்பதை கற்றுத் தந்ததுடன் அந்த ஊக்கம் தான் என்னை வழிநடத்தி செல்கிறது. எந்த துறையிலும் சிறந்தவராக விளங்க ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார்.

எனவே, ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எனது வாழ்க்கையை மாற்றிய விளையாட்டு உங்களது வாழ்க்கையையும் மாற்றும் என தெரிவித்துள்ளார்.