(எம்.ஆர்.எம்.வஸீம்)
பணம் மற்றும் அதிகார பலத்துக்கு மத்தியிலே தேர்தலில் வெற்றிபெற்றேன். வன்னியில் இலகுவில் வெற்றி பெறலாம் என நினைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் எமது பலத்தை நாங்கள் காட்டியிருக்கின்றோம் என தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று மாலை தெஹிவளை சஹ்ரான் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்டந்து குறிப்பிடுகையில், ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ்வை வெற்றிபெறச் செய்ய பாரிய சவால்களை நாங்கள் வன்னி மாவட்டத்தில் எதிர்கொண்டோம். அதேபோன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக எமக்கு எதிராக பல பொய் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. அவற்றையெல்லாம் மக்களுக்கு தெளிவுபடுத்தியே எமது பிரசாங்களை மேற்கொண்டோம்.

குறிப்பாக இனவாத பிரசாரங்கள் எமது பிரதேசங்களில் உச்சக்கட்டத்தில் இருந்தன. அதேபோன்று கோடிக்காணக்கான ரூபாக்கள் செலவிட்டு எம்மை தோற்கடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றையெல்லாம் முறியடித்துக்கொண்டே  இந்த வெற்றியை பெற்றுக்கொண்டேன்.  அத்துடன்  எமது  எதிர்த்தரப்பில் போட்டியிட்ட பிரபல வேட்பாளர் இந்த தேர்தலில் 22கோடி ரூபாக்களை செலவழித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்தளவு தொகையை செலவழித்து அவருக்கு எதிராக செயற்பட என்னிடம் பணம் இருக்கவில்லை. தேர்தலின்போது எனக்கு ஒரே ஒரு நபர் மாத்திரமே உதவியளித்தார். என்றாலும் எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் சவால்களை முறியடித்துக்கொண்டு செயற்பட்டேன் என்றார்.