(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் முக்கிய மூன்று கொள்கைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவு ஆகியவற்றை முன்னிறுத்தி நாட்டிற்கும் பிரஜைகளுக்கும் முக்கியத்துவமளித்து, சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் 5 - 10 வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்வதை நோக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உறுதியளித்தார்.

அதேவேளை, காலமாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டுக்கொள்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமிருப்பின் அதனைச் செய்வதற்கும் வெளிவிவகார அமைச்சு எதிர்பார்த்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடக்கவுரை ஆற்றிய போதே ஜயநாத் கொலம்பகே இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நான் இவ்வமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்று இரண்டு நாட்கள் மாத்திரமே பூர்த்தியடைந்திருக்கின்றன என்றாலும், வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 

நாம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு கலந்துரையாடினோம். எனினும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அத்தகையதொரு புதிய உலக ஒழுங்கைப் பின்பற்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. 

கொரோனா வைரஸ் தொற்றினால் சம்பவிக்கும் மரணங்களின் சதவீதம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் மிகக்குறைவாக இருக்கும் அதேவேளை, தொற்றிலிருந்து குணமடையும் வீதம் 85 சதவீதத்தை விடவும் அதிகமாக உள்ளது.

இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிலும், வெற்றியிலும் தினேஷ் குணவர்தன தலைமையிலான வெளிவிவகார அமைச்சிற்கு முக்கிய பங்குண்டு. 

கடந்த காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும், அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதிலும், வெளிநாடுகளிலிருந்து மருந்துப்பொருட்களை உரிய வேளையில் பெற்றுக்கொள்வதிலும் ஒட்டுமொத்த வெளிவிவகார அமைச்சும் இரவு, பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. 

அதனால் தான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் தினேஷ் குணவர்தனவையே வெளிவிவகார அமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார் என்று கருதுகின்றேன்.

எமது நாடு கடந்த காலங்களில் வெவ்வேறு விதமான வெளிநாட்டுக்கொள்கைகளைப் பின்பற்றி வந்திருக்கிறது. 

காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற மிகச்சிறந்த வெளிவிவகார அமைச்சர்களை கடந்த காலத்தில் எமது நாடு கொண்டிருந்தது. 

எனினும் காலமாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. 

2019 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாடுகளுடன் பின்பற்றப்பட்ட கொள்கைகளையும் நாம் அவதானித்திருக்கின்றோம். 

அவற்றில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய கொள்கைகளை ஆராய்வதுடன், அவற்றை மறுசீரமைப்பதற்கும் வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டிருக்கிறது.

அதேவேளை, 5 வருட பதவிக்காலத்தைக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் எதிர்வரும் 10 - 15 வருடங்களைக் கருத்திற்கொண்டே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. 

இல்லாவிட்டால் எதிர்வரும் காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். 

ஆகவே கோத்தபாய ராஜபக்ஷவின் முக்கிய மூன்று கொள்கைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவு ஆகியவற்றை முன்னிறுத்தி நாட்டிற்கும் பிரஜைகளுக்கும் முக்கியத்துவமளித்து எதிர்வரும் 5 - 10 வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்வதை நோக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என அவர் மேலும் என்றார்.