மஸ்கெலியா சாமிமலை டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசைட் தோட்ட காரியாலய திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

“குறித்த தோட்ட  நிர்வாகத்தால் தமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது எனவும்  கடந்த ஒரு வருட காலமாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றது. இதனால்  தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  

கூடுதலான தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு தொழிலுக்கு சென்றுவிட்டனர் என தொழிலாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நாம் பறிக்கும் கொழுந்தை மாற்றிடங்களுக்கு அனுப்புகின்றனர். 

இதனால் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொழிலாளர்களின் சேமநல விடயங்கள் மறுக்கப்பட்டு தேயிலை மலைகள் காடாக்கப்பட்டுள்ளதால் தேயிலை மலைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகின்றது எனவும் தமக்கு நீதி வேண்டும்.” எனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

இவற்றை அடிப்படையாகக் கொண்டே  அவர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.