பாலாவி கரம்பை பகுதியில் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் விமானப்படையின் இரகசியப் பிரிவினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கில் ஒன்றில் இவ்வாறு கேரள கஞ்சா எடுத்துச் செல்லப்படுவதாக விமானப் படையின் இரகசியப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிலை பரிசோதனை செய்த போதே குறித்த கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான 4 கிலோ 250 கிராம் கேரளக் கஞ்சா இரண்டு பைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் விமானப்படையினர் குறிப்பிட்டனர்.

பாலாவி கரம்பை நாயக்கர் சேனைப் பகுதியில் விற்பனை செய்யும் நோக்கில் குறித்த கேரள கஞ்சா எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் விமானப்படையினர் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பிரிவின் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.