(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உரிமை தொடர்பாக  ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த சங்கத்தின் செயலாளர் நியமனம் தொடர்பாகவே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வடிவேல் சுரேஷ் செயற்பட்டு வந்தார். இருந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்ததன் மூலம் இந்த தொழிற் சங்கத்தின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அதன் பிரகாரம் தொழிற்சங்கத்தின் செயலாளராக செயற்பட்டுவந்த வடிவேல்சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படுவதனால், ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, ராமய்ய யோகராஜன் ஆகிய இருவரும்  சங்கத்தில் வெற்றிடமாகி இருந்த பதவிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால்  பெயரிடப்பட்டிருந்தன. பின்னர்  சங்கத்தின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியினர் இதுதொடர்பாக நீதிமன்றம் சென்றிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டு வந்த வடிவேல் சுரேஷ் குறிப்பிடுகையில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சுயாதீனமான சங்கமாகும். அதற்கு பதவிகளை நியமிக்கும் அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை என தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று இதுதொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவு செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவிக்கையில், குறித்த தொழிற் சங்கத்தின் உரிமை ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கின்றது. அதன் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கே இருக்கின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினர்களான காமினி திஸாநாயக்க மற்றும் ஜே,ஆர், ஜயவர்த்தன இருவருமே குறித்த தொழிற்சங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதேபோன்று இறுதியாக சங்கத்தின் செயலாளராக இருந்த வடிவேல் சுரேஷின் பெயர், அதன் செயலாளராக நியமிக்க கட்சியின் செயற்குழுவின்  பரிந்துரைக்கமையவே செயற்பட்டது. அதனால் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பூரண உரிமை ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கின்றது எனவும்  நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.