• மாவையின் புதல்வரான கலையமுதனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சு, சம்பந்தன், சிறிதரன், சுமந்திரன், இல்லாத தமிழரசுக்கட்சியுடன் விக்கி தரப்பினர் இணைந்த பயணத்திற்கான ஆரம்பமாகவோ அன்றேல் கலையமுதனின் அரசியல் அடையாளத்திற்கான அங்குராட்பணமாகவோ இருக்கலாம். 

  • சுமந்திரன் அல்லது சிறிதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுகின்ற பட்சத்தில் அவர்களில் ஒருவர் நிச்சயமாக 'கட்சித்தலைமை' என்ற மாவையின் 'அடிமடியில்' கைவைப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்று தான்.


இலங்கை தமிழரசுக்கட்சி 'கட்சியாக' இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 'கட்டமைப்பாக' இல்லை, போரின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய அரசியலில் பெரிதும் உச்சரிக்கப்படும் வாக்கியங்களாக இருந்து வருகின்றன.

தமிழரசுக்கட்சி சரியாக கட்டமைக்கப்பட்டு கூட்டமைப்பும் முறையாக பதிவாகின்றபோது தமிழர்களுக்கான வலுவானதொரு அரசியல் இயக்கம் அமையும் என்பது பலரது கருத்து. ஆனால் கூட்டமைப்பினது பங்காளிகளின் எண்ணிக்கையும், தமிழரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சுருங்கியே வருகின்றது.

அதுமட்டுமன்றி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வௌ;வேறு முகங்களாய் சிதறி நிற்கும் அனைத்து தமிழ்த் தரப்பினையும் ஓரணியில் திரட்டி அதியுச்ச பேரம்பேசும் சக்தியைக் கொண்ட 'தமிழ்த் தேசிய திரட்சியான அரசியல் சக்தியை' ஏற்படுத்தி விட முடியும் என்பதும் பலரது கனவாகவுள்ளது.

இதன் அடிப்படையிலேயே மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழனத்தின் எதிர்கால நலன்களை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட பகிரதப்பிரயத்தனத்தினால் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு தளத்திற்கு கொண்டுவந்தார். 

ஆனால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் நெகிழ்வுப்போக்கற்ற நிலையால் ஆண்டகையின் முயற்சி தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சிவில் அமைப்புக்கள், சமயத்தலைவர்கள், துறைசார் நிபுணத்துவமானவர்களை கொண்ட அமைப்புக்கள் யாழ்.பல்கலை மாணவர்கள் என்று யார் யாரோவெல்லாம் ஒற்றுமைக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் அப்படியே அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையிலேயே மீண்டும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை பற்றி பேசப்படுகின்றது. ஒருமித்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியான, இலங்கை தமிழரசுக்கட்சியும், பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ போன்றனவும் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளன.

ஆனால், பல்வேறு விமர்சனங்களை தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் தலையெடுத்துவிட்ட விக்கி அணியும், கஜேந்திரகுமார் அணியும் இனி தங்களுக்கான தனித்துவ அடையாளங்களை விட்டு கூட்டமைப்பில் சங்கமிப்பதற்கு வாய்பபுக்கள் மிகக்குறைவு. அதனைவிடவும் அந்தத் தரப்பினுள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளும் கூட்டமைப்பில் சங்கமிப்பது என்பதற்கு அப்பால் ஒருங்கிணைந்து பணியாற்றுவதைக் கூட சிந்திப்பதற்கு தடைகளை ஏற்படுத்தும் தலையிடியாக மாறியுள்ளது. 

மறுபக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சி, பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சி என்ற இறுமாப்புடன் ஏகாதிபதியாக இருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைமை மிகவும் மேசமாக மாறியுள்ளது. 

தமிழரசில் வெறுமனே அரசியல் குழுவின் தலைவர் என்ற பதவியை மட்டும் வைத்துக்கொண்டு அனைத்து தீர்மானங்களையும் கட்சித்தலைமையை கடந்து முடிவெடுக்கிறார் சம்பந்தன். 

தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கமும், மாவை.சேனாதிராஜாவும் எலியும், புலியுமாக மாறியுள்ளனர்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் இரண்டாவது தடவையாகவும் அதிகளவு விருப்பு வாக்கப்பெற்றுள்ள சிறிதரன், நிலைமையை தனக்கு சாதகமாக்கி தலைமையை ஏற்பதற்குரிய தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதோடு அதனை பொதுவெளியிலும் தெரிவித்துவிட்டார். 

எந்தச்சவாலுக்கும் முகங்கொடுக்கவல்ல சுமந்திரன் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் தன் கட்சியினுள்ளே அதிகளவு 'குழிகள்' வெட்டப்பட்டன என்பதை உணர்ந்து மனம் நொந்து நின்றார். அந்த நேரத்தில், கைகொடுத்த நண்பர் சிறிதரனின் தலைமைக் கனவை நனவாக்குவதற்கு வழமையைப்போன்றே சாணக்கிய காய்நகர்த்தலை செய்து உதவ தயார் என்று அறிவித்திருக்கின்றார் சுமந்திரன். 

இந்த நிலைமைகளால் சம்பந்தன், சுமந்திரன், துரைராஜசிங்கம், சிறிதரன் ஓரணியாகவும், மவை.சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், சரவணபவன், கனகசபாபதி, குலநாயகம் உள்ளிட்டவர்கள் இன்னொரு அணியாகவும் இருக்கின்ற நிலைமை தோற்றம்பெற்றுள்ளது. 

கிழக்கிலும், பொதுச்செயலாளர் சார்பான தரப்புக்களும்,மாவைக்கு சார்பான தரப்புக்களும் இல்லாமில்லை. 

வடக்கைப்போன்றே கிழக்கும் இருதரப்பாக பிளவுபட்டு நிற்கின்றது. தன்பதவியை துரத்தும் தரப்பை சமாளிப்பதா, தேசியப்பட்டியல் ஆசனத்தினை மீளப்பெறுவதா, பிளவுபட்டு நிற்கும் கட்சியை கட்டமைப்பதா என்று மாவைக்கு திரிசங்குநிலை ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்திலிருந்து அதன் பின்னர் அரசியல் புரட்சி ஏற்பட்டு நெருக்கடி நிலைமைகள் தோன்றும் வரையில், தமிழரசுக்கட்சியின் தலைவரிடத்தில் முக்கிய தீர்மானங்கள் அல்லது கலந்துரையாடல்கள், அல்லது சந்திப்புக்கள் அல்லது கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பினால், 'தம்பி சுமந்திரனிடம் கேளுங்கள் அவர் கூறுவார்' 'தம்பி சுமந்திரன் தான் அந்த விடயத்தினை பார்த்துக்கொள்கின்றார்', 'சம்பந்தனும், சுமந்திரனும் தான் அறிவி;ப்பார்கள்' என்ற பதில்களே வரிசையாக வரும். 

ஒருகட்டத்தில் 'சுமந்திரனே எல்லாம்' என்றிருந்த நிலைமை, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணிக்கான புதிய நிருவாகத் தெரிவின் பின்னர் சற்றே மாற ஆரம்பித்தது. 

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவையின் புதல்வாரன கலையமுதன் உயர்கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பியிருந்த நிலையில் 'செயற்பாட்டு அரசியலுக்கான' அங்கீகாரத்தினை பெறுவதற்கு விளைந்திருந்தார். தந்தையின் அரசியல் வாரிசாக மிளரவே அவர் அதிகம் விரும்பினார். 

குறிப்பாக தமிழரசின் வாலிபர் முன்னணியில் முக்கிய பதவியொன்றை பெறுவதற்கும் கலையமுதன் விளைந்திருந்தார். அவ்வாறான பதவியொன்றை மகனார் பெற வேண்டும் என்று தந்தை மாவைக்கு விருப்பமும் இருந்தது. இருப்பினும், சுமந்திரன் அணியின் காய்நகர்த்தலோ என்னவோ கலையமுதனுக்கு கையறு நிலையே ஏற்பட்டது. 'தானாடாது விட்டாலும் தசையாடும்' என்ற நிலை மாவைக்கு மகன் விடயத்தில் ஏற்பட்டது.

மகனுக்கு அரசியல் அடையாளத்தினை தான் இருக்கும்போதே பெற்றுக்கொடுப்பதில் மாவை கரிசணை கொள்ளத்தவறவில்லை. இதன் தொடர்த்தேச்சியாக, மாவைக்கும், சுமந்திரனுக்கும் அரசல்புரசல்களாக ஆரம்பித்த கீறல்கள் அவ்வப்போது வெளிப்பட ஆரம்பித்தன. 

குறிப்பாக பாராளுமன்ற வேட்பாளர் தெரிவில் சரவணபவனுக்கு ஆசனம் வழங்ககூடாது என்பதில் சுமந்திரன் விடாப்பிடியாக இருந்தார். எனினும் மாவையின் தலையீட்டால் சுமந்திரனின் 'பிடி' தளர்த்தப்பட்டு, தகர்க்கப்பட்டது. அதன் பிரதிபலிப்பாக சுமந்திரனை மையப்படுத்தி சுன்னாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கேள்விபதில் கூட்டத்தில் மாவைக்கு பலமான 'அடி' கொடுக்கப்பட்டது. 

ஒருகட்சிக்குள்ளே அதுவும் தலைவருக்கு எதிராக அவருடைய பகுதியிலேயே கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமளவிற்கு நிலைமைகள் சென்றிருந்ததை ஆராய்ந்த மாவை தரப்பு அதற்கு பதிலடி வழங்க தயாரான போதும், மாவை 'அப்படியொரு கூட்டம்' அதாவது 'சுமந்திரனுக்கு பதிலடி வழங்கும் கூட்டம்' அவசியமில்லை என்று பின் வாங்கினார். 

அதன்பின்னர் சிங்கள ஊடகத்துக்கான நேர்காணலில் சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகளை மையப்படுத்தி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பங்காளிகளும், கட்சியில் உள்ளவர்களும் அழுத்தங்களை வழங்கினர். 

நிருவாகச் செயலாளர் குலநாயகம் கூட பகிரங்கமாக எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கவும் அவற்றை பொருட்டாக கொள்ளாது அமைதியாக இருந்தார் மாவை. மாவையின் இந்த நிலைப்பாடு பலருக்கு  அவர்மீதிருந்த நல்ல அபிப்பிராயங்களை இறங்குமுகத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பின்னர் தேர்தல் நடைபெற்றது. விகிதாரசார பிரதிநிதித்துவ தேர்தலின் பிரதான குணாம்சமாக காணப்படும் 'விருப்பு வாக்குகள்' முறையால் வழமைபோன்றே தமிழரசுக்கட்சிக்குள் 'தனித்த ஓட்டங்களும்' 'குழு அமைத்து குழி பறிக்கும்' நகர்வுகளும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டன.

அச்சந்தர்பத்தில் தான்,  தமது வெற்றிவாய்ப்புக்கள், விருப்பு வாக்குகள் உள்ளிட்டவற்றை கணக்குப் போட்டுபார்த்த சிறிதரனும், சுமந்திரனும் கடந்தகால 'கீரியும் பாம்பும்' நிலைமையை மறந்து கைலாகுகொடுத்து கட்டித்தழுவினர். 

சுமந்திரனின் சாணக்கிய நகர்வுகளும், சிறிதரனின் தேசியம் சார் பேச்சுக்களும் அவர்களின் வெற்றிக் கணக்கை உறுதிப்படுத்தின. கூட்டிணைவில் பெற்ற வெற்றி நட்புறவிலும் நம்பிக்கையான புரிதலை ஏற்படுத்தியது. அந்தப்புரிதல் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. 

தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தமிழரசுக்கட்சியின் சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை யார் பெறுகின்றார்களோ அதாவது சுமந்திரன் அல்லது சிறிதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுகின்ற பட்சத்தில் அவர்களில் ஒருவர் நிச்சயமாக 'கட்சித்தலைமை' என்ற மாவையின் 'அடிமடியில்' கைவைப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்று தான். 

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைமையும், பொதுச்செயலாளரும் தேர்தலில் தோல்வி அடையவும், கட்சிக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படவும் சுமந்திரனின் காய்நகர்த்தல் பணி இலகுவானது. யாழில் வைத்து தலைமையையும், பொதுச்செயலாளரையும் பகிரங்கமாக குற்றம் சாட்டிய சுமந்திரன் பின்னடைவுகளுக்கான காரணகர்த்தக்களாகவும் அவர்களை அடையாளப்படுத்தினார். 

ஏகநேரத்தில் கட்சியின் தலைமையை ஏற்படுதற்கு தயார் என்று கிளிநொச்சியில் வைத்து அறிவித்தார் சிறிதரன். இந்த அறிவிப்புக்கள் தேர்தல் பின்னடைவுகளை கண்டிருந்த மாவைக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

அந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள்வதற்குள் மிக இலாவகமாக சம்பந்தனையும் பொதுச்செயலாளரையும் பயன்படுத்தி தேசியப்பட்டியல் ஆசனத்தினை அம்பாறைக்கு வழங்கி கனகச்சிதமாக தனது திட்டத்தினை நிறைவேற்றினார் சுமந்திரன். 

அதுமட்டுமன்றி மாவையின் மகனும், கனகசபாபதியும் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யதாகவும் தேர்தல் காலத்தில் அமைதியாக இருந்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் சுமந்திரன். 

ஏற்கனவே வாலிபர் முன்னணியில் மகன் ஒதுக்கப்பட்டமை, மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தில் ஏற்பட்ட சலசலப்பில் மகன் தாக்கப்பட்டமை, மகன் மீது சுமந்திரனின் பகிரங்க குற்றச்சாட்டுக்கள், தனக்கு தேசியப் பாராளுமன்ற உறுப்புரிமை இன்மை, தலைமைத்துவத்தினை பறிக்கும் முயற்சிகள் இப்படி மாவையின் மீது 'அடிமேல் அடிகள்' தொடர்ந்தன. 

கடந்த சில நாட்களாக பலரது கோரிக்கைகளாலும் நேற்று சனிக்கிழமை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் என்பதாலும் சுமந்திரன், சிறிதரன் அணியின் தொடர் பாய்ச்சல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மீண்டும் தொடராது என்பதற்கு எந்த உறுதிப்பாடுகளும் இல்லை. 

அத்துடன், தலைமையை கைப்பற்றுவதோ அல்லது கட்சியை தம்வசப்படுத்துவதோ என்றால் முதலில் மத்திய குழுவிலும், பொதுச்சபையிலும் பெரும்பான்மை ஆதரவு தேவையாக உள்ளது. மத்திய குழுவில் 50 உறுப்பினர்களும், பொதுச்சபையில் 150 உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்களில் எத்தனை பேர் தமக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்பதை சுமந்திரன், சிறிதரன் அணி கணக்கீடு செய்யும் பணியை திரைமறைவில் ஆரம்பித்திருப்பதாக  தகவல். கிளிநொச்சியில் நடைபெற்ற நூற்றுக்கும் அதிகமான கூட்டங்கள் அதற்கு சான்றாகின்றன. அதேபோன்று மாவை அணியும் ஆய்வில் இறங்கியுள்ளது. ஆகவே அந்தக் கணக்கீடு நிறைவடையும் வரையிலும் மேற்குறிப்பிட்டவாறு சுமந்திரன் தரப்பின் பாய்ச்சல் இடைநிறுத்தப்பட்டே இருக்கும். 

அதேநேரம், கட்சித்தலைமையைத் தக்க வைப்பதற்கு முனையும் மாவைக்கும் கைப்பற்ற முனையும் சுமந்திரன், சிறிதரன் ஆகிய இருதரப்பினருக்குமே துருப்புச் சீட்டாக இருப்பது மாகாண சபைத் தேர்தல் தான். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் 'வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் வேட்பாளர்களாக களமிறக்குவோம்' என்ற வாக்குறுதியைத் தான் மத்தியகுழு, பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு இருதரப்பாலும் அதிகபட்சம் முன்வைக்கப்படும் பேரமாக இருக்கப்போகின்றது. 

ஆனால், இந்தப்பேரத்திற்கு அப்பால் மாவையின் புதல்வாரன கலையமுதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுடன் சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றார். இந்த சந்திப்பில் தந்தையார் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை, இணைந்த பயணம் உள்ளிட்ட பலவிடயங்கள் பற்றி பேசப்பட்டிருப்பதாக தகவல். 

இந்தப்பேச்சுவார்த்தையானது சம்பந்தன், சிறிதரன், சுமந்திரன், இல்லாத தமிழரசுக்கட்சியுடன் விக்கி தரப்பினர் இணைந்த பயணத்திற்கான ஆரம்பமாகவோ அன்றேல் கலையமுதனின் அரசியல் அடையாளத்திற்கான அங்குராட்பணமாகவோ இருக்கலாம். இவ்விரண்டும் இல்லையென்றால் சுமந்திரன், சிறிதரனுக்கான ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகக் கூட இருக்கலாம்.

அத்துடன் மாவைக்கு ஆதரவாக, பங்காளிக்கட்சிகளான புளொட்டும், ரெலோவும் இருப்பதும், கூட்டமைப்பு வெளியே தமிழ்த் தேசியப்பரப்பில் சுமந்திரனுக்கு எதிராகவுள்ள தரப்புக்களும் மறைமுக ஆதரவை வழங்குவதற்கு தயராகி வருவதும் எவ்வளவு தூரம் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துமென்று கூறமுடியாது. 

அதேநேரம், சுமந்திரன் தனது வழமையான பாணியில் 'ஒருவர் தலைநிமிர்த்தி பார்ப்பதற்குள் அடுக்கடுக்கான அடிகளையும்;, விரைந்த நகர்வுகளையும்' தொடர்வாராயின் அதற்குமுகங்கொடுக்கும் ஆற்றல் மாவை தரப்பிற்கு உள்ளதா என்பதும் கேள்விக்குறியே. 

மேலும் சிறிதரனையும், துரைராஜசிங்கத்தையும் தமிழரசின் பதவிகளில் தற்போதுள்ளவாறே வைத்துக்கொண்டு தலைமைக்கு எதிரான ஆட்டத்தில் தாயக்கட்டைகளாக சுமந்திரன் உருட்ட ஆரம்பித்தால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதும் சிந்தித்துப்பார்க்க வேண்டியதாகவுள்ளது 

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் மாவை, சுமந்திரன் தரப்பினை ஒன்றிணைப்பதற்காக எத்தனை சமரசங்கள் பேசினாலும், இருதரப்பும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் கூட இனி இந்தத் தரப்புக்கள் இதய சுத்தியாக ஒன்றுபட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பெறுவது கல்லில் நார் உரிப்பதற்கு சமமானது. 

அரசியல் ஆதாயத்திற்கான பகட்டாகவே அவர்களின் ஒற்றுமை இனி இருக்கப்போகின்றது என்பதே கசப்பானதும் யதார்த்தமானதுமான விடயமாகின்றது. அடுத்து வரும் தேர்தலில்களில் மிகமோசமான குழிபறிப்புக்களும், வெட்டுக்குத்துக்களும் இடம்பெறாது என்று கூறுவதற்கு உத்தரவாதங்களுமில்லை. 

குறிப்பாக பாராளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனப் பறிப்பிற்கு பிரதியுபகாரமாக எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை.சேனாதிராஜா நிறுத்தப்படலாம். எனினும் அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை இறுதிவரை கூறி மாவை ஏமாற்றப்படுவதற்கும் வாய்ப்புண்டு. 

ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டிணைந்து மாவை, முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் அனைவரும் ஒன்றிணைந்து விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்குவதற்கு பணியாற்றியது போன்று செயற்பாட்டு ரீதியாக நடப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. 

மேலும் தற்போதைய தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பார்க்கின்றபோது மாவை.சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் அவரது தலைமையில் ஆட்சி அமையுமா? என்பதும் ஆழமாக ஆராயப்பட வேண்டி தொன்றாகின்றது. 

இதேவேளை, தென்னிலங்கையில் சர்வ வல்லமையுடன் ராஜபக்ஷ தரப்பு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கையில் தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒன்றுபட முடியாதிருப்பதும், ஆகக்குறைந்தது ஒரேகட்சிக்குள் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாதிருப்பதும் தமிழினத்தின் சாபக்கேடு என்பதற்கு அப்பால் 'தமிழின அழிப்பின்' மற்றொரு வடிவமே.


- ஆர்.ராம் -