தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவோம் என்று, பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள்,  கூறியிருந்தனர்.

இப்போது பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அவர்கள் இனி கூட்டமைப்புடன் பேசத் தயாரில்லை என்று கூறத் தொடங்கி விட்டார்கள். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ள முடியாத நிலை இப்போது கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது,

கூட்டமைப்பிடம் இருந்த 16 ஆசனங்கள் 10 ஆக குறைந்து விட்டன. அதைவிட, அரசாங்கத்துடன் ஒத்து நிற்கும் கட்சிகளுக்கு 4 ஆசனங்கள் கிடைத்து விட்டன. இதனை வைத்துக் கொண்டு தான், இனிமேல் தமிழ் மக்களின் ஏக பிரநிதிகள் என்று கூறிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு  குரல் எழுப்ப முடியாது என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். அதேவேளை கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கருதிக் கொண்டு தாங்கள் அவர்களுடன் பேச்சுக்களை நடத்தப் போவதில்லை என்றும், அரசாங்கத் தரப்பில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுடனேயே பேசப் போவதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன.

இந்த இரண்டு கருத்துக்களுமே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் தேசிய அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் எண்ணம் அல்லது விருப்பம் அரசாங்கத்துக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து செயற்படாவிடினும், ஒற்றுமையுடன் செயற்பட முனைந்தால் கூட, அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தலாம். ஆனால், கஜேந்திரகுமார் தரப்பு அதற்கு இணங்கிப் போகும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்கள், தமக்குப் பின்னால் கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2 ஆசனங்களைக் கொண்ட கஜேந்திரகுமார் தரப்புக்கே இந்த பிடிச்சிராவித்தனம் இருக்கிறது என்றால், நாடாளுமன்றத்தில் 150 ஆசனங்களைக் கொண்ட மகிந்த ராஜபக்ச அரசுக்கு எந்தளவுக்கு இருக்கும் என்று யோசிக்க வேண்டும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று விட்டாலும், எதையும் செய்யக் கூடிய வல்லமையுடன் இருந்தாலும், அதற்கென சில நெருக்கடிகள் இருக்கத் தான் செய்யும். குறிப்பாக தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அவர்களுக்கு தலைவலி மிக்க ஒரு விடயமாகத் தான் இருக்கும்.

ஏனென்றால் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அரசியல் தீர்வை தட்டிக்கழிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லை என்ற நொண்டிச்சாட்டை கூறிவந்தன. மகிந்த ராஜபக்ச 2010இல், பலாத்காரமான முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கியிருந்த போது கூட, தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி நடத்திக் காலத்தைக் கடத்தியது தான் மிச்சம்.

அப்போது கிடைத்த வாய்ப்பை மகிந்த ராஜபக்ச தவற விட்டிருந்தார். அந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், வடக்கிலும் கூட அவர் கொண்டாடப்படும் ஒருவராக இருந்திருப்பார். இந்தமுறை வடக்கில் தேர்தல் பிரசாரங்களுக்கு மகிந்த ராஜபக்சவோ, கோத்தாபய ராஜபக்சவோ, வரவில்லை.  ஏனென்றால், அவர்கள் வந்தால் கிடைக்கும் வாக்குகளும் ஆசனங்களும் குறைந்து விடும் என்றே அவர்களின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கருதினார்கள்.

இப்படியானதொரு நிலை, தான் வடக்கில் இருக்கிறது. தமிழ் மக்களுக்கான உரிமைகளை கொடுத்து, அதிகாரங்களையும் வழங்கும் ஒரு தீர்வை அவர் எட்டியிருந்தால், இவர்களின் வருகைக்காக வேட்பாளர்கள் காத்துக் கொண்டு வரிசையில் நின்றிருப்பார்கள்.

அவ்வாறான ஒரு வாய்ப்பை தவற விட்டவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச. இப்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதுவும், சில பாடங்கள், படிப்பினைகளுக்குப் பிறகு தான், இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்- தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எதனைச் செய்யப் போகிறார்? தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதைக் கூட பிரதமர் மகிந்த ராஜபக்ச இதுவரை வெளிப்படுத்தியதில்லை.

எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும் என்று அவர் நழுவிக் கொள்வதை வழக்கமாக கொண்டவர். ஆனால் இனிமேல் அவரால் அவ்வாறு நழுவிக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு நிலைப்பாட்டுக்கு அவர் வந்தாக வேண்டும். ஒன்றில் தமிழர்களுக்கு இது தான் தீர்வு இதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்று தெளிவாக கூற வேண்டும். அல்லது தமிழர்களுக்கு என்று எந்த தீர்வையும் தர விரும்பவில்லை என்று அடித்துக் கூறி விட வேண்டும்.

இதைச் சொல்வதற்கு அவருக்கு தைரியம் அவசியம் இல்லை. ஏனென்றால் அவரிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, ஆட்சி கவிழ்ந்து போய் விடும் அச்சம் தேவையில்லை. அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொய் கூற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்த பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான ஏதோ ஒரு தீர்வை- திட்டத்தை – முயற்சிகளை அவர் முன்னெடுத்தாக வேண்டிய கட்டம் உருவாகி விட்டது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போய் அவர், நாடாளுமன்றத்தில் உரிய பலம் இல்லை என்று இனிக் கூறிக் கொண்டிருக்க முடியாது. தேவையான அரசியல் பலம் அவரது உள்ளங் கைக்குள்ளேயே இருக்கிறது. இந்தப் பலத்தை அவர் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தலைவர் என்ற வகையிலும் அவர் முடிவை எடுக்கலாம். அல்லது எல்லா மக்களுக்குமான தலைவர் என்ற அடிப்படையிலும் அவர் முடிவை எடுக்கலாம்.

அனுராதபுரவில் உள்ள ருவன்வெலிசயவில், பதவியேற்பு உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, எல்லா மக்களினதும் ஜனாதிபதியாக இருப்பேன் என்று உறுதி கூறியிருந்தார். அந்த உறுதிமொழி சிறுபான்மையினருக்கானது தான். ஆனால் ஜனாதிபதியினாலோ, பிரதமராலோ எல்லா மக்களுக்குமான ஜனாதிபதியாக இருந்து விடுவது இலகுவானதல்ல. அதுவும், இந்த முறை நாடாளுமன்றம் கடும் போக்குவாதிகளால் நிரம்பியிருக்கிறது. அவர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள ஒரு நாடாளுமன்றத்தின் ஊடாகப் பிரச்சினைகளை தீர்ப்பது அவ்வளவு எளிதானதல்ல.

ஆனாலும், இது நாட்டின் நிரந்தர அமைதியையும், நிலையான தீர்வையும் ஏற்படுத்தக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எல்லா மக்களினதும் பிரதமராக உயரப் போகிறாரா அல்லது சிங்கள மக்களின் பிரதமராகத் தொடரப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எது எவ்வாறாயினும், இப்போதைய அரசுக்கு முண்டு கொடுக்கும் எல்லா தமிழ் பிரதிநிதிகளுக்கும் ஒரு சிக்கல் வரும்.

இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்க்காவிடின், அவர்கள் அதற்கு பதில் கூற வேண்டியிருக்கும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருந்தும், அதனை நிறைவேற்ற முடியாத நீங்கள் எவ்வாறு இன்னொரு முறை வாக்கு கேட்டு வருவீர்கள் என்று மக்கள் அடுத்த முறை கேள்வி எழுப்புகின்ற நிலை அவர்களுக்கு ஏற்படும். அந்த இக்கட்டான நிலையில் இருந்து அவர்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச காப்பாற்றுவாரா? 

 -என்.கண்ணன் -