நடந்து முடிந்த தேர்தலை தொடர்ந்து அதிர்ச்சிகரமான சில நிகழ்வுகளை காணமுடிகின்றது. எனினும் இவை அனைத்தும் எதிர்பார்த்த ஒன்று. எனவே அது தொடர்பில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை என பலரும் பேசிக் கொள்வதைக் காண முடிகின்றது.  

இதேவேளை, நாட்டுக்கு எதிரான விடயங்களைக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நீக்கப்படும் வரை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணசபைகளுக்கு வழங்கப்படமாட்டாது என புதிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  

தனது அமைச்சின் கடமைகளை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு திருவாய் மலர்ந்துள்ளார். கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசுகையில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று தான் கூறி வந்தனர் .

ஆனால் இவரோ ஒரு படி மேலாகச் சென்று நாட்டுக்கு எதிரான விடயங்களைக் கொண்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பதின்மூன்றாவது திருத்தத்தை கொண்டுவர கடுமையாக உழைத்தவர்கள் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள் ? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

இது ஒருபுறமிருக்க முல்லைத்தீவு மற்றும் எல்லை கிராமங்களில் நில ஆக்கிரமிப்பு குறைந்தபாடில்லை. முல்லைத்தீவு, கொக்கிளாய் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள்  அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கிய மனுவில் கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களின் விவசாயம் செய்யும் வயல்களையும் வாழ்வாதார குடியிருப்புகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அபகரித்து வருவதாகவும் அதேபோன்று தமிழர்களின் பூர்வீக காணிகளை கடற்படையினரும் சுவீகரித்து முகாம் அமைத்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கமும் கடற்படையினரும் கனியவள நிறுவனமும் திரைமறைவில் தங்கள் பூர்வீக காணிகளைக் அபகரித்து வருவதாக குறித்த பிரதேச தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்றைய சூழலில் இதை எல்லாம் யாரிடம் போய் சொல்வது என்று பெருமூச்சு விடுவதை தவிர வேறு என்ன செய்யலாம்?

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்