ராஜபக்சாக்களின் பிரமாண்ட தேர்தல் வெற்றி : இலங்கையிலும் பிராந்தியத்திலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள்

16 Aug, 2020 | 10:04 AM
image

-ருட்ரோநீல் கோஷ்-

இலங்கையில் கடந்தவாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பிரமாண்டமான வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. மொத்தம் 225 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துக்கு ஆக, 5 ஆசனங்களே குறைவாக 145 ஆசனங்களை அந்தக்கட்சி பெற்றிருக்கிறது. இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதி முதன்மையான அந்தஸ்துக்கு வந்திருக்கிறது. இது இலங்கையின் உள்விவகாரங்களிலும் பிராந்திய புவிசார் அரசியலிலும் விளைவுகளை கொண்டிருக்கும்.

உள்நாட்டு அரசியலை பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதில் ராஜபக்சாக்கள் முக்கிய கவனம் செலுத்தக்கூடும். ஜனாதிபதியின் பதவிக்காலங்களை மட்டுப்படுத்தியதுடன் அதிகாரங்களையும் குறைப்புச்செய்த அந்த திருத்தம், பாராளுமன்றத்துக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அதிகாரங்களை பரவலாக்கியது. அதை ராஜபக்சாக்கள் மாற்றியமைப்பார்களேயானால், மஹிந்த ராஜபக்சவின் இரு பதவிக்காலங்களிலும் காணக்கூடியதாகவிருந்த சகல வல்லமையும் பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீண்டும் கொண்டுவருவதாக இருக்கும்.

அதுமாத்திரமல்ல, எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான வழியையும் அது வகுக்கக்கூடும். எது எவ்வாறிருந்தாலும், ராஜபக்சாக்கள் இப்போது ஜனாதிபதி பதவியையும் பாராளுமன்றத்தையும் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்மூலம் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் முக்கியமான பதவிப்பொறுப்புகளை ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பெற்று பயனடையக்கூடிய நிலை நிச்சயம் ஏற்படும். ஆனால், 2015இல் சகல வல்லமையும் பொருந்திய ஜனாதிபதியை தூக்கியெறிந்தபோதிலும் கூட ஏன் இலங்கை பழைய நிலைக்கே திரும்புகிறது? ஜனாதிபதி ஒரு அரசியல் முகாமை சேர்ந்தவராகவும் பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பு இன்னொரு அரசியல் முகாமை சேர்ந்ததாகவும் இருந்தாலும் மஹிந்தவை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவதற்கு ஒன்றுசேர்ந்து வகுத்த முன்னைய அரசியல் ஏற்பாடு நடைமுறைக்கு ஒவ்வாததாக போனமையே இதற்கு காரணமாகும்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொள்கை முடக்கநிலையொன்று ஏற்பட்டது. பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ததினால் ஏற்பட்ட 2018 அரசியலமைப்பு நெருக்கடி உட்கிடையான பதற்றங்களை தெளிவாக வெளிக்காட்டியது. (பிரதமரை பதவி நீக்கும் ஜனாதிபதியின் முடிவை இறுதியில் இலங்கை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்தது.) 

250க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட கடந்தவருட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களின் வடிவில் மைத்திரி – ரணில் தலைமையிலான சஞ்சலமான கூட்டணி அரசாங்கத்துக்கு பெரியதொரு பாதிப்பு ஏற்பட்டது. அந்த குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த பாராளுமன்றத் தெரிவுக்குழு, குண்டுத் தாக்குதல் திட்டங்களை கண்டுபிடித்து தடுப்பதற்கு தவறிய அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரத்தின் செயற்பாடுகளில் இருந்த பாரிய குறைபாடுகளை அம்பலப்படுத்தியது.

இவையெல்லாம் சேர்ந்து குழப்பகரமான ஆட்சிமுறை சகதிக்குள் இருந்து நாட்டை மீட்பதற்கு உறுதியானதும் தெளிவானதுமான தலைமைத்துவம் ஒன்று தேவை என்ற நம்பிக்கையை இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. இதன் காரணத்தினால்தான் அவர்கள் கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு அமோகமாக வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அதைப்போன்று இப்போது மஹிந்தவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் பிரமாண்டமான ஆணையை பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கின்றனர்.

ராஜபக்சாக்களின் மீள்வருகை பிராந்திய புவிசார் அரசியல் மீது செலுத்தக்கூடிய தாக்கமே இரண்டாவது விளைவாகும். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவர் சீனாவுடனான உறவுகளை தீவிரமாக வளர்த்தெடுத்தார். இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவு சீன முதலீடுகளை வரவழைத்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் அதற்கொரு உதாரணமாகும். பிறகு அந்த துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜபக்சாக்கள் மீண்டும் ஒருதடவை சீனாவை மும்முரமாக அரவணைப்பார்களா என்பதே இப்பொழுது எழுகின்ற கேள்வி. அவ்வாறு நிகழுமேயானால், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளில் - அதுவும் குறிப்பாக பெய்ஜிங்வுடன் எல்லை பிராந்தியத்தில் மூலோபாய தகராறொன்றில் புதுடெல்லி ஈடுபட்டிருக்கும்போது – எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதே அடுத்த கேள்வி.

தங்களது முதலாவது ஆட்சிக் காலத்திலிருந்து படிப்பினைகளை பெற்றிருக்கக்கூடிய ராஜபக்சாக்கள், இந்தியாவுக்கு பாதிப்பான முறையில் சீனாவுடன் உறவுகளை தங்களால் இப்போது முன்னெடுக்க முடியாது என்பதை புரிந்துக்கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். கடந்த சில வருடங்களில் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பல தடவைகள் மேற்கொண்ட விஜயங்களும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக புதுடெல்லிக்கு சென்றமையும் இதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. 2015இல் ஜனாதிபதி பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை அகற்றியதில் இந்தியா ஒரு மறைமுகமான பங்கை வகித்ததாக வதந்திகள் உலாவின. ஆனால், புதுடெல்லி அவற்றை நிராகரித்ததுடன் உள்நாட்டு காரணிகளின் விளைவாகவே அவருக்கு அந்த கதி ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.

ஆனால் எது எவ்வாறிருந்தாலும், தங்களால் புதுடெல்லியை சுலபமாக ஓரங்கட்ட முடியாது என்பதை ராஜபக்சாக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தவிரவும், வரலாற்றையும் இன மற்றும் கலாசார உறவுகளையும் கருத்திலெடுத்து நோக்கும்போது இந்தியாவும் இலங்கையும் உண்மையில் பிளவுற்று இருக்க முடியாது. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இந்தியாவிலிருந்து பெருமளவு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகின்றன. இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற வேறு எந்த ஒரு நாடும் அந்த இடத்தை பதிலீடு செய்ய முடியாது. 

அதனால் இத்தடவை ராஜபக்சாக்கள் இலங்கையில் இந்திய நலன்களையும் சீன நலன்களையும் பொறுத்தவரை கூடுதலானளவுக்கு நல்லறிவுடையதும் சமநிலையானதுமான அணுகுமுறையை கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியம். கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து நாடுவதை சீனா நிறுத்திக்கொள்ளும் என்பது இதன் அர்த்தம் அல்ல. ஆனால், இத்தடவை பெய்ஜிங் வழங்க முன்வரக்கூடிய உதவிகளின் காரணமாக சீனாவை ராஜபக்சாக்கள் விழுந்தடித்துக்கொண்டு கட்டியணைப்பது சாத்தியமல்ல. ஆனால், அதேவேளை, கொழும்பு புதுடெல்லியிடமிருந்து கூடுதலான விடயங்களை எதிர்பார்க்கும். அவற்றை நிறைவேற்றுவதற்கு இந்தியா தவறினால் சீனாவுக்கு மீண்டும் அனுகூலமாக அமையும்.

(கட்டுரையாளர் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் துணைஆசிரியர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13