கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ரஷ்யா நாடு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. விரைவில் இது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய பல ஆண்டுகள் ஆகும் என்றும், கொரோனா வைரஸின் தன்மை மாறிக்கொண்டே இருப்பதால் அதனை ஒரே ஒரு தடுப்பு மருந்தால் கட்டுப்படுக்க இயலும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே ஒரு தடுப்பு மருந்து என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் விளக்கமளிக்கையில்,

' இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கொரோனா குறித்த அச்சம் குறைந்துவிட்டது. விரைவில் பூரண குணம் அடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. ஊட்டசத்து மிக்க உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வாழ்வதே கொரோனாவை விரட்ட ஒரே வழி என்றும் உணர்ந்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல்வேறு மாறுபாடுகளை அடையும். அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது இதற்கு ஒரே வழி.' என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 25 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட நிலையில் கண்டுபிடித்து வருகிறார்கள். ஆனால் இவற்றின் வீரியம் மாறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டின் பருவநிலை, மக்களின் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி, உணவு , வயது என பல காரணிகள் தடுப்பு மருந்தின் வீரியத்தை தீர்மானிக்கின்றன. எனவே கொரோனாவை ஒழிக்க ஒரே ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினம் என மருத்துவ வல்லுநர்கள்  தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் ஆர்த்தி

தொகுப்பு அனுஷா.