அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னிய மாநில செனெட்டரான கமலா ஹரிஸை (வயது 55) தெரிவுசெய்திருக்கிறார்.

'அரை இந்தியரும் அரை ஜமேய்க்கருமான கமலா ஹரிஸ் முழுமையான அமெரிக்கர்" என்று கடந்த செவ்வாயன்று அவரது தெரிவையடுத்து சில பத்திரிகைகள் வர்ணித்தன. அபிப்பிராய வாக்கெடுப்புக்கள் தற்போது எதிர்வுகூறுவதைப் போன்று நவம்பர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெறுவாரேயானால், உலகின் மிகவும் 'பலம்பொருந்திய நபருக்கு" அருகாக அமெரிக்காவின் உபஜனாதிபதியாக கமலா ஹரிஸ் நிற்பார்.

கமலா ஹரிஸின் காலஞ்சென்ற தாயார் சியாமளா கோபாலன் தமிழகத்தின் தலைநகரான சென்னை குடும்பமொன்றைச் சேர்ந்தவர். அவர் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளராவார். தந்தையார் டொனால்ட் ஜே.ஹரிஸ் கரீபியன் தீவான ஜமேய்க்காவைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவின் ஸ்ரன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார்.

கலிபோர்னியாவின் சட்டமாதிபராக பணியாற்றிய கமலா ஹரிஸ், பிறகு அமெரிக்க செனெட்டுக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அந்தப் பதவியினை வகிக்கும் இரண்டாவது ஆபிரிக்க அமெரிக்கப் பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவரானார். இப்பொழுது பிடன் அவரைத் தனது உபஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்ததையடுத்து அமெரிக்க வரலாற்றில் அவ்வாறு உபஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் மூன்றாவது பெண்மணியாகவும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஏற்கனவே 1984 இல் ஜனநாயகக்கட்சியின் உபஜனாதிபதி வேட்பாளராக ஜெரால்டின் பெராரோ என்ற பெண்மணியும், 2008 ஆம் ஆண்டில் குடியரசுக்கட்சியின் உபஜனாதிபதி வேட்பாளராக சாரா பார்லினும் களத்தில் நின்றனர்.

இப்போது உபஜனாதிபதியாகப் போட்டியிடுகின்ற இந்திய மற்றும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது பெண்மணி என்ற பெருமைக்கும் கமலா ஹரிஸ் உரியவராகின்றார். தேர்தலில் வெற்றிபெற்று தான் ஜனாதிபதியானால் ஒரேயொரு பதவிக்காலத்திற்கு - அதாவது 4 வருடங்களுக்கு - மாத்திரமே பதவியிலிருக்கப்போவதாக ஜோபிடன் அடிக்கடி கூறுவதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் வரக்கூடிய வாய்ப்புக்களும் பிரகாசமாக இருக்கின்றன.

கமலா ஹரிஸ் அமெரிக்காவில் இந்திய அமெரிக்க சமூகத்தின் படிப்படியாக வளர்ந்த அரசியல் உச்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றார். சுமார் 45 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்திய அமெரிக்க சமூகம் (பெரும்பாலும் முதல் தலைமுறையினர்) அமெரிக்காவில் நன்கு படித்த - மிகவும் தனவந்த இனக்குழுவாக வெளிக்கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு அரசியலில் அந்த சமூகத்தவர்கள் பிரவேசித்து, மேம்பட்ட நிலைக்கு வருவதில் காட்டிய வேகமே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுப் பதவிக்கு வருவதென்பது குடியேற்றவாசிகள் சமூகத்தைப் பொறுத்தவரை கடப்பதற்கு மிகவும் சிக்கலானதொரு தடையாக இருக்கிறது.

அவ்வாறிருந்தாலும் இந்திய அமெரிக்க சமூகத்தின் இளந்தலைமுறையினர் உயர்வான அரசியல் பதவிகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு மாநில ஆளுநர்களாகவும், 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களாகவும் தங்களது சமூகத்தவர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப்படும் இந்திய அமெரிக்க சமூகம் இப்போதும் உபஜனாதிபதி வேட்பாளராகத் தம்மவர் வந்திருக்கிறார் என்று கொண்டாடமுடியும்.

அமெரிக்காவின் முதன்முதலான ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் (அவரின் இருபதவிக்காலங்களிலும் உபஜனாதிபதியாகப் பதவிவகித்தவர் ஜோபிடன்) ஆலோசனைகளைப் பெறுவதில் அக்கறை காட்டிவந்திருக்கும் ஜோபிடன் கடந்த மூன்று மாதங்களாக அவருடன் நடத்திய கலந்துரையாடல்களுக்குப் பிறகே கமலா ஹரிஸை தனது உபஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய முடிவெடுத்ததாகக் கூறப்படுகின்றது.

ஜோபிடனும் பராக் ஒபாமாவும் ஜனநாயகக்கட்சியில் பதவித்தெரிவுகள் குறித்தும், நாட்டின் அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கிரமமாகக் கலந்துரையாடி வந்ததாக அவர்களுடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு முக்கியஸ்த்தர் சி.என்.என் செய்திச்சேவைக்குக் கூறினார்.

கமலா ஹரிஸை தெரிவுசெய்ததன் மூலம் தனது உபஜனாதிபதி வேட்பாளராகப் பெண்மணி ஒருவரையே தெரிவு செய்யப்போவதாக அளித்த பகிரங்கமான வாக்குறுதியை ஜோபிடன் நிறைவுசெய்திருக்கிறார்.

பரந்தளவிலான அமெரிக்க மக்களினால் ஒரு கறுப்பு அமெரிக்க அரசியல்வாதியென்று கமலா ஹரிஸ் அடையாளப்படுத்தப்படும் காரணத்தால் ஜனாதிபதி வேட்பாளராகும் தனது பிரசாரத்திற்குப் பெரிதும் உதவி தன்னைக் காப்பாற்றிய கறுப்பின சமூகத்திற்கும் தனது நன்றிக்கடனை ஜோபிடன் செலுத்தியிருக்கிறார்.

தனது அடையாளத்தின் மூலமாக கமலா ஹரிஸ் சமூகநீதி இயக்கங்கள் அமெரிக்காவை உழுக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இன, நிற மற்றும் பால்நிலை சமத்துவத்தின் ஒரு சின்னமாக விளங்குகின்றார். அவரை ஜோபிடன் தெரிவு செய்தமைக்கான காரணங்கள் என்று பார்க்கும் போது அவர் ஒரு இந்திய அமெரிக்கராக இருப்பது முக்கியத்துவமான அம்சமாகக் கருதப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். அவரது இந்தியப்பூர்வீகம் ஒரு அக்கறையாகவும் இருக்கக்கூடாது. இந்திய அமெரிக்கராக இருப்பது அமெரிக்காவில் மிகவும் சிறியதொரு சமூகத்திலிருந்து வந்தவர் அவர் என்பதை மாத்திரமே அர்த்தப்படுத்தும். அதுபோக 4 நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக அமெரிக்காவின் வரலாற்றின் அங்கமாக விளங்கிவந்ததாக உரிமைகோரக்கூடிய லறினோஸ் சமூகம் ஜனாதிபதி அல்லது உபஜனாதிபதிப் பதவிகளுக்கான வேட்பாளராக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவாகக்கூடிய வாய்ப்பை இதுகாலவரையில் இழந்திருக்கிறது என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் (12 ஆகஸ்ட் 2020) சுட்டிக்காட்டியிருக்கிறது.

அமெரிக்க பிரதான அரசியல் நீரோட்டத்தின் அங்கமாக வருவதில் இந்திய அமெரிக்க சமூகத்தின் வெற்றியை வைத்துக்கொண்டு இந்தியாவை விசேட கவனத்துடன் கமலா ஹரிஸ் நோக்கவேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கக்கூடாது. அவர் சராசரி அமெரிக்கரையும்விட இந்தியாவுடன் கூடுதலானளவிற்குப் பரிட்சையம் கொண்டவராக இருப்பார். ஆனால் இந்தியா மீது கூடுதல் அனுதாபம் கொண்டவராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கமலா ஹரீஸின் கருத்துநிலைகளை நோக்குகையில் அவர் ஜோபிடனை விடவும் தாராளப்போக்குடையவர் என்பதைக் காண்பிக்கிறது. அதனால் நரேந்திமோடி அரசாங்கத்துடன் அவர் நெருங்கிவருவார் என்று பெரிதாக எதிர்பார்க்க முடியாது. தனது தாய்நாட்டைப் பற்றிய அவரது உணர்வுகள் எவ்வாறு இருந்தாலும் வலதுசாரி அரசியல் திருப்பத்தை எடுத்திருக்கும் இந்தியாவின் கருத்துக்களை அவர் ஐயுறவுடனேயே நோக்கும் வாய்ப்பிருக்கிறது.

மிகவும் கடுமைவாய்ந்த வழக்கறிஞரென்று பெயரெடுத்த கமலா ஹரிஸ் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சித்தேர்தலில் ஜோபிடனுக்குப் போட்டியாக நிற்பதற்கு முன்வருகின்ற அளவிற்குப் போதுமான அரசியல் ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அத்தகைய ஒருவரை உபஜனாதிபதி வேட்பாளராக ஜோபிடன் தெரிவுசெய்திருப்பதை, ஜனநாயகக்கட்சியின் வேட்பாளராவதற்குத் தன்னுடன் உட்கட்சித்தேர்தல்களில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை தனது வெளியுறவுச் செயலாளராகத் தெரிவுசெய்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செயலுக்கு நெருக்கமான சமாந்தரத்தன்மை உடையதாகப் பார்க்கலாம். முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சுஷான் ரைஸ் மற்றும் மசாசூசெட்ஸ் மாநில செனெட்டரான எலிசபெத் வாரென் உட்பட பலம்பொருந்திய பலர் மத்தியிலிருந்தே ஹரிஸை பிடன் தெரிவுசெய்திருக்கிறார்.

இனவெறிக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுப்பவரும் வெள்ளையரல்லாத பெண்மணியுமான ஒருவரை பிடன் மிகப்பொருத்தமான ஒரு தருணத்தில் தெரிவுசெய்திருக்கிறார். இந்தத் தெரிவு சில மாதங்களுக்கு முன்னர் மினியாபோலிஸ் நகரில் வெள்ளையினப் பொலிஸ்காரர் ஒருவரினால் ஜோர்ஜ் ப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதையடுத்து நிறவெறிக்கும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் எதிராக அமெரிக்கா பூராகவும் மூண்ட 'கறுப்பரின் உயிர்களும் முக்கியமானவை" என்ற இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றம் ஆதரவாளர்கள் உட்பட பலர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

ஜனநாயகக்கட்சியின் உபஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதை எதிர்பார்த்து இருந்தவர்களும் கமலா ஹரிஸின் தெரிவைப் பெரிதும் வரவேற்று கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். கொள்கையில் உறுதிகொண்ட ஒரு தலைவி என்று கமலா ஹரிஸை சுஷான் ரைஸ் வர்ணித்திருக்கும் அதேவேளை, மிச்சிக்கன் மாநில ஆளுநரான க்ரெசென் வைற்மெர் கமலா ஹரிஸையும் பிடனையும் ஆதரிப்பதில் அதிவிசேடமான பெருமைகொள்வதாகக் கூறியிருக்கிறார். 

சமூக, இன மற்றும் பொருளாதார நீதிக்கான போராட்டத்தில் நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பலம்பொருந்திய சக்தியாக ஆக்குவதில் ஜோபிடனுக்கு மகத்தான பங்காளியாக ஹரிஸ் விளங்குவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயகக்கட்சியின் வேறு முக்கியமான தலைவர்களும் ஹரிஸுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எமது நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளுக்கு தனக்கு இருக்கின்ற முன்னுதாரணமான தலைமைத்துவ மரபை செனெட்டர் ஹரிஸ் தொடர்ந்து பயன்படுத்துவார் என்று அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோஸி கூறியிருக்கிறார். உபஜனாதிபதி வேட்பாளராகக் களத்தில் நிற்பதற்கு ஹரிஸ் மிகமிகப் பொருத்தமானவர் என்று பராக் ஒபாமா கூறியிருக்கின்ற அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் ஜோபிடனும் கமலா ஹரிஸும் சேர்ந்து பலம்பொருந்திய ஒரு அணியாக விளங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹிலாரி கிளின்டன் கமலா ஹரிஸை தெரிவுசெய்வதற்குத் தன்னுடன் இணையுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பூர்வீகம்

கமலா ஹரிஸ் 1964 அக்டோபர் 20 ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்டில் பிறந்தார். மார்பகப்புற்றுநோய் ஆராய்ச்சியாளரான அவரது தாயார் சியாமளா கோபாலன் பேர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் சுரப்பியியல் கலாநிதிப்பட்டத்தைப் பெறுவதற்காக 1960 இல் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிப்பெயர்ந்தவராவார். ஸ்றென்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரத்துறைப் பேராசிரியரான டொனால்ட் ஜே.ஹரிஸ் பேர்க்லியிலுள்ள அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பிற்காக 1960 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த கரீபியன் தீவான ஜமேய்க்காவிலிருந்து குடிபெயர்ந்தார். கமலா ஹரிஸும் அவரது இழைய சகோதரியான மாயா ஹரீஸும் பேர்க்லி நகரிலேயே வளர்ந்தனர்.

கமலா ஹரிஸும் மாயாவும் கறுப்பின பப்டிஸ்ட் தேவாலயத்திற்கும் இந்துக்கோவிலுக்கும் சென்று வழிபட்ட வண்ணமே வளர்ந்தவர்களாவர். தங்களது தாயாரின் குடும்பத்தவர்களைப் பார்ப்பதற்காக அவர்கள் அவ்வப்போது சென்னைக்கு வந்துபோனார்கள். அதன் விளைவாகத் தமிழ் ஓரளவிற்குப் புரியும் என்று கமலா ஹரிஸ் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

கமலாவுக்கு 7 வயதாக இருக்கும்போது அவர்களது பெற்றோர் விவகாரத்துப் பெற்றுவிட்டனர். தானும் சகோதரியும் வாரஇறுதி நாட்களில் தந்தையாரைப் பார்ப்பதற்கு பாலோஅட்லோ நகருக்குச் சென்றபோது தாங்கள் கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் அயலவர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களோடு சேர்ந்து விளையாட அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். கமலா ஹரிஸுக்கு 12 வயதாக இருக்கும்போது அவரது சகோதரி மற்றும் தாயாருடன் சேர்ந்து கனடாவின் மொன்றிலுக்கு நகர்ந்தார்கள். அந்த நகரிலுள்ள யூதப்பொதுவைத்தியசாலையில் ஒரு ஆராய்ச்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்ட தாயார் மெக்கில் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

கியூபெக் மாநிலத்தின் வெஸ்ட்மௌன்ட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்விகற்ற கமலா, 1981 இல் அந்தப் படிப்பை முடித்துக்கொண்டு, வரலாற்று ரீதியாக வாஷிங்டனில் கறுப்பினத்தவரின் பல்கலைக்கழகமாக விளங்கிவந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 1986 இல் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்திலும் பொருளியலிலும் இரட்டை பி.ஏ பட்டதாரியாக வெளியேறினார்.

அதற்குப்பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹாஷ்ஸ்றிங்ஸ் சட்டக்கல்லூரியில் கமலா ஹரிஸ் சேர்ந்தார். அங்கு படித்த காலத்தில் கறுப்பின சட்ட மாணவர்கள் சங்கத்தின் தலைவியாகப் பணியாற்றிய கமலா, 1989 இல் சட்டப்பட்டதாரியாக வெளியேறினார். 1990 ஜுனில் சட்டத்துறைத் தொழிலில் ஈடுபடுவதற்கான பரீட்சையில் சித்தியடைந்தார். 1990 இல் கலிபோர்னியா அலமேடா பிராந்தியத்தில் பிரதி மாவட்ட சட்டத்தரணியாக அவர் அமர்த்தப்பட்டார். விரைவாக முன்னேறிவருகின்ற ஒரு ஆற்றல் வாய்ந்த வழக்குத்தொடுநராக அவர் அடையாளம் காணப்பட்டார். 1994 இல் கலிபோர்னியா சட்டசபையின் சபாநாயகர் வில்லிபிரவுன் கமலா ஹரிஸை மாநிலத்தின் வேலையில்லாதோருக்கான காப்புறுதி மேன்முறையீட்டு சபைக்கும், பிறகு கலிபோர்னியா மருத்துவ உதவி ஆணைக்குழுவிற்கும் நியமித்தார். வில்லியுடன் ஹரிஸுக்கு ஒரு உறவு இருந்தது. பிறகு அவர் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றுவதற்காக வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகிக்கொண்டார்.

பொதுவாழ்வு ஈடுபாட்டிற்கு உற்சாகம் தந்த பாட்டனார் 

சாம்பியாவில் ஒஸாகாவில் இருந்த தனது தாய்வழிப் பாட்டனார் பி.வி.கோபாலன் வீட்டில் 1960 களின் பிற்பகுதியில் கமலா ஹரிஸ் தனது சிறுபராயத்தைக் கழித்தார். இந்திய சிவில்சேவை உத்தியோகத்தரான கோபாலனை ரொடிஸீயாவில் (சிம்பாபே) இருந்து படையெடுக்கும் அகதிகளின் நெருக்கடியைக் கையாள்வதற்கு சாம்பியாவிற்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கம் அங்கு அனுப்பிவைத்தது.

பிரிட்டனிடமிருந்து ரொடிஸீயா சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய வேளையில் இது நடந்தது. சென்னைக்குத் தெற்கே 180 மைல்கள் தொலைவிலுள்ள கோவில்கள் நிறைந்த பைங்கநாடு கிராமத்தில் 1911 இல் பிறந்தவர் கோபாலன். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிவருடங்களில் - 1930 களில் கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்ட பிறகு உடனடியாக அரசாங்க சேவையில் ஒரு சுருக்கெழுத்தாளராகச் சேர்ந்த கோபாலனின் குடும்பம் சிவில் சேவையில் அவர் பதவிநிலைகளில் உயர்ந்துகொண்டு வந்தபோது டில்லியிலிருந்து மும்பைக்கும் பிறகு கொல்கதாவிற்கும் நகர்ந்தது.

பாட்டனார் கோபாலனுடனான உறவு கமலா ஹரிஸின் வாழ்க்கையை தீர்மானித்தது. 1998 இல் அவர் காலமாகும் வரை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கமராவுடன் ஒரு பேனா நண்பராகவும் வழிகாட்டியாகவும் கோபாலன் விளங்கிவந்தார். பொதுச்சேவையில் கமலா ஹரிஸுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த உதவியவர் அவரே. 'எனது உலகில் எனது பெருவிருப்பத்திற்குரியவர்களில் எனது பாட்டனாரும் ஒருவர்" என்று அண்மைய நேர்காணலொன்றில் அவர் கூறியிருந்தார்.

ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரசாரங்களின் போது கடந்த வருடம் கமலா ஹரிஸ் சளைக்காத மார்பகப்புற்றுநோய் ஆராய்ச்சியாளரான சியாமளாவை அடிக்கடி நினைவுகூர்ந்தார்.

வாழ்வில் மேல்நிலைக்கு வருவதற்கும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் பாடுபடவேண்டும் என்று தாயாரே தனக்கும் தனது சகோதரி மாயாவிற்கும் போதித்தார் என்று கமலா ஹரிஸ் கூறுவார். சியாமளாவின் அந்த மேன்மையான சிந்தனை கோபாலனிடமிருந்தும் தாயார் ராஜத்திடமிருந்தும் வரமாக வந்தது.

'சியாமளாவின் சிந்தனை செந்நெறி மீது தந்தையார் பெரும் தாக்கத்தைச் செலுத்தினார். அதேபோன்றே கமலா மீது சியாமளா பெரும் செல்வாக்கைச் செலுத்தினார்" என்று கமலா ஹரிஸின் தாய்மாமனார் பாலச்சந்திரன் அண்மையில் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியாளருக்கு புதுடில்லியில் தனது இல்லத்தில் வைத்து அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். சியாமளாவுடன் சேர்த்து கோபாலனுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் ஒரு பிராமண குடும்பத்தின் பாரம்பரியங்களை எல்லாம் கடந்து தங்கள் சொந்தவழிகளில் வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். பாலச்சந்திரன் விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் இருந்து பொருளியலிலும், கணினி விஞ்ஞானத்திலும் கலாநிதிப்பட்டம் பெற்றவர். இந்தியாவில் கல்வித்துறையில் புகழ்பெற்றவராக விளங்கிய அவர் மெக்சிகோ பெண்மணியொருவரைத் திருமணம் செய்துகொண்டதுடன் அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சியாமளாவின் ஒரு இளைய சகோதரியான சரளா தாய்மை மருத்துவராக இருந்து ஓய்வுபெற்றவர். சென்னைக்கு வெளியே வாழ்ந்துவரும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களது இளைய சகோதரியான மகாலக்ஷ்மி கனடாவின் ஒன்ராரியோவில் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானியாக அரசாங்கசேவையில் பணியாற்றுகிறார். பெற்றோரினால் ஒழுங்குசெய்யப்பட்ட திருமணத்தைச் செய்த அவருக்குப் பிள்ளைகள் இல்லை.

'எனது தாயார் உட்பட அவரது சகோதரர்களில் எவருமே பாரம்பரிய வழக்கங்களைக் கொண்டவர்களல்ல" என்று இந்தியாவிற்கு ஒரு சிறுமியாக வந்து நீண்ட நாட்கள் தங்கியிருந்த போது மாமனாருடனும் சிறியதாயாருடனும் நெருக்கமான உறவுகொண்டு வளர்ந்த கமலா ஹரிஸ் கூறினார்.

'நாம் கடைப்பிடிக்கும் உண்மைகள்" என்ற தலைப்பில் 2019 இல் தனது சரிதையை எழுதிய கமலா ஹரிஸ், தனது பாட்டனார் கோபாலன் இந்தியாவின் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் முக்கிய பங்களித்தவர் என்றும், ஆனால் ஒரு செயற்திறன் மிக்க அரசாங்க உத்தியோகத்தர் என்பதைத் தவிர பாட்டனார் வேறு எதிலும் பங்குபற்றியிருந்தார் என்பதற்கான எந்தப்பதிவும் குடும்ப உறுப்பினர்களிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கமலாவின் தாயார் சிறந்த ஒரு பாடகி. தென்னிந்தியாவின் கர்நாடக சங்கீதத்தில் தாயாரிடம் மிகவும் கட்டுப்பாடாகப் பயிற்சி பெற்றுக்கொண்டவர். தேசிய சங்கீதப்போட்டி ஒன்றில் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்த சியாமளா, வானொலியிலும் இடைக்கிடை பாடல்பாடி சொற்ப பணத்தைச் சம்பாதித்துக்கொள்வார். அந்தப் பணத்தை பெற்றோரின் அனுமதியுடன் சியாமளாவே வைத்துக்கொள்வார் என்று பாலச்சந்திரன் நேர்காணலில் கூறினார். அமெரிக்காவில் படித்த காலத்தில் சியாமளா கறுப்பின குடியியல் உரிமைகள் இயக்கத்திலும் இணைந்துகொண்டார். அந்த இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில்தான் மிகுந்த விவேகியான பொருளியல் மாணவனான டொனால்ட் ஹரிஸை சந்தித்தார். அவர்கள் 1963 இல் திருமணம் செய்துகொண்டனர். தனது பெற்றோருக்கு தனது காதலனை முன்கூட்டியே சியாமளா அறிமுகம் செய்யாத காரணத்தினால் அவர்களது காதல் திருமணம் இந்தியப் பாரம்பரியத்தில் பெரும் சவாலுக்குள்ளானது.

சியாமளாவின் பெற்றோருக்கு டொனால்ட் ஹரிஸின் இனத்தைப் பற்றியோ, நிறத்தைப் பற்றியோ பிரச்சினையில்லை. ஆனால் அவர் இந்தியாவில் திருமணம் செய்யவில்லை என்பதும் தாங்கள் அறிந்திராத ஒருவரை மகள் மணமுடிக்கிறார் என்பதும் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடும் என்று பாலச்சந்திரன் கூறினார். அமெரிக்காவில் நடந்த திருமணவைபவத்தில் குடும்பத்தில் இருந்து எவரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதற்கு நிதி ரீதியான காரணங்களைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

1970 களின் முற்பகுதியில் டொனால்ட் ஹரிஸை விவகாரத்துச் செய்துகொண்ட பிறகு சியாமளா தனது மகன்மாரை இந்தியாவிற்கு அடிக்கடி, அதுவும் வழமையாக சென்னைக்குக் கூட்டிவந்தார். கோபாலன் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் குடும்பம் சென்னையிலேயே குடியேறியிருந்தது.

கோபாலன் தனது வயோதிப நண்பர்களுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது மூத்த பேரப்பிள்ளையான கமலா ஹரிஸீம் அடிக்கடி கூடவே செல்வார். அந்த நடைப்பயிற்சியின் போது இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும், ஊழலை ஒழிப்பது பற்றியுமே அவர்கள் விவாதித்துக்கொள்வார்களாம். குடியியல் உரிமைகளினதும் சமத்துவத்திற்கும் நேர்மைக்குமான போராட்டத்தினதும் முக்கியத்துவம் குறித்துத் தீராத நம்பிக்கைகளை எனது பாட்டனார் கொண்டிருந்தார்.

உண்மையில் நேர்மையான அரசாங்க சேவையாளர்கள் ஊழல்வாதிகளுடன் போராடவேண்டியிருப்பது பற்றியே எப்போதும் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது என்று கமலா ஹரிஸ் கூறினார்.

முழுக்குடும்பமும் ஒன்றுகூடிய நிகழ்வு கோபாலனின் வாழ்வின் இறுதிவருடங்களின் போது, 1991 ஆம் ஆண்டில் கோபாலனின் 80 ஆவது பிறந்ததினக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் சென்னையில் முழுக்குடும்பமும் ஒன்றுகூடியது. கமலா ஹரிஸின் மனதிற்கு இனிய நினைவுகளில் ஒன்றாக இரு;ககிறது. 20 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தவர்கள் முழுப்பேரும் ஒன்றுசேர்ந்து நின்றது அதுவே முதற்தடவையாகும்.

குடும்ப வைபங்களில் கமலா ஹரிஸ் புடவைகளையே அணிந்துகொள்வார். அத்துடன் உறவினர்களுடன் ஒருசில வார்த்தைகள் தமிழிலும் பேசினார். தனது பிள்ளைகள் இந்தியாவுடனான பிணைப்புக்களைத் தொடர்ந்து பேணவேண்டும் என்று உறுதிகொண்டவராக சியாமளா இருந்தார். தங்களை கறுப்பர்களாக நோக்கும் ஒரு அமெரி;காவில் இரு கறுப்பின மகள்களை சியாமளா வளர்த்தார் என்று தனது சரிதையில் தாயாரைப்பற்றி கமலா குறிப்பிட்டிருக்கிறார்.

பாலச்சந்திரனின் (வயது 80) மகனான 36 வயதான சாரதா ஒரிஹியூலா சியாமளா தனது இந்தியத்தன்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் பின்வருமாறு கூறியிருக்கிறார். 'கமலா ஹரிஸும் மாயாவும் இந்தியர்கள் என்பது பற்றி ஒருபோதும் கேள்வி எழவில்லை. அவர் அதுபற்றி எந்த மனக்குழப்பத்திற்கும் உள்ளானதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் இந்தியர்கள். நீங்கள் கறுப்பர்கள். நீங்கள் இதில் ஏதாவது ஒன்று என்று யாருக்கும் நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவையில்லை" என்று அவர் மகள்மாருக்குக் கூறினார்.

சியாமளா குடல்புற்றுநோய் காரணமான சிக்கல்களினால் 2009 ஆம் ஆண்டில் காலமானார். அப்போது அவருக்கு 70 வயது. அதே வருடத்தில் அவரது தாயாரும் காலமானார்.

தொகுப்பு - செய்திப்பிரிவு