(ஆர்.யசி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் தேசிய உற்பத்தியை பலப்படுத்தி அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேசிய ரீதியிலான வளர்ச்சியை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும் என இன்று கமத்தொழில் அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே, கமத்தொழில் அமைச்சுக்கான கடமை பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள கமத்தொழில் அமைச்சில் இன்றுகாலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அமைச்சர் மஹிந்தானந்த ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி நியமித்த பல அமைச்சுக்கள் குறித்து கேலியும் கிண்டலும் செய்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் விலங்கு உணவுகள் உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது, சோளம் உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது. பத்திக் ஆடைகளை உற்பத்தி செய்து தேசிய உற்பத்திகளை பலப்படுத்த அமைச்சர் ஒருவருக்கு பொறுப்புகளை வழங்கும் போது அதனை நகைப்பிற்கு உற்படுத்த முடியுமா. இவ்வாறு பல உள்நாட்டு உற்பத்திகளை பலபடுத்தும் அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சர்வதேச நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வதால் தேசிய உற்பத்தியை எவ்வாறு பலப்படுத்த முடியும். அதற்காகவே நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளை பலப்படுத்தி அதன் மூலமாக வருவாயை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாது எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் நாம் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை. இன்று அமைச்சிற்கும் இராஜாங்க அமைச்சிற்கும் வெவ்வேறு விதத்தில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகளை அதிகம் வழங்கியுள்ளனர். நாம் தேசிய உற்பத்தி சார்ந்த வேலைத்திட்டத்தை பலபடுத்த நினைக்கின்றோம். எதிர்க்கட்சி எப்போதுமே சர்வதேச இறக்குமதியை நம்பியுள்ளனர். இதுவே எம் இரு ஆட்சிக்கும் இடையிலான வித்தியாசமாகும். எவ்வாறு இருப்பினும் மிகச் சிறந்த அமைச்சரவை உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் தேசிய விவசாயம் பலமடையும் என வாக்குறுதி வழங்குகின்றோம்.

இந்த நாட்டில் 70 வீதமானவர்கள் மத்திய தர வர்க்கத்தினர். அதேபோல் 40 வீதம் நேரடியாக விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களும் 30 வீதமானவர்கள் மறைமுகமாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆகவே 70 வீத விவசாய துறைகளை வைத்துக்கொண்டு நாம் சர்வதேச நாடுகளை நம்பி வாழ முடியாது. சகல வளங்களும் எம்மிடம் இருந்தும் நாம் இறக்குமதியை நம்புவது தவறானது. பழங்களையும், பாலையும், மரக்கறிகளையும் இறக்குமதி செய்கின்றோம். ஆனால் இவை அனைத்துமே எம்மிடம் உள்ளது. மனித வளமும், இயற்கை வளமும் எம்மிடம் இருந்தும் நாம் அதனை பயன்படுத்த தவறி வருகின்றோம். எனவே இம்முறை ஆட்சியில் இந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. எம்மால் தேசிய உற்பத்தியை பலப்படுத்த முடியும். 2 இலட்சம் ஏக்கர் நிலம் வெறுமையாக உள்ளது. ஆகவே இனியும் நாம் சர்வதேசத்தை நம்பி இருக்காதை தேசிய உற்பத்தியை பலப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.