(நா.தனுஜா)

இந்தியாவினால் சட்டத்திற்கு முரணான வகையில் உடைமையாக்கிக்கொள்ளப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் அவர்களுடன் எப்போதும் உடன்நிற்பதுடன், உதவிகளை இழந்திருக்கும் அவர்களுக்காக நாம் எம்மால் இயலுமானவரை குரலெழுப்புவோம்.

சட்டத்திற்கு முரணாக ஜம்மு - காஷ்மீர் கையகப்படுத்தப்பட்டமையின் விளைவாக இப்பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து சர்வதேச சமூகத்திற்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுதந்திரதினச்செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானின் 74 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராயலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சுதந்திரதினச்செய்தி வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியதாவது:

நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் இந்த சுதந்திரதினத்தின் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கின்றோம். நாம் கடந்துவந்த சுமார் 7 தசாப்தகாலத்தில் உள்நாட்டிற்குள்ளும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம்.

எனினும் எமது மக்கள் எப்போதும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் காண்பித்து வந்திருக்கின்றார்கள். அதேபோன்று எத்தகைய சவாலெனினும் ஒற்றுமையையே முன்நிறுத்த வேண்டும் என்று நாம் உறுதிபூண வேண்டும். நாம் எமது இலக்கினை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை, சுதந்திரத்திற்குரிய தன்மைகளை உறுதிசெய்யும் வகையிலான ஒரு அரசநிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதை முன்நிறுத்தியும் செயற்பட்டு வருகின்றோம். அதுமாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படக்கூடிய நிர்வாக்கட்டமைப்பொன்றையே உருவாக்க முற்படுகின்றோம்.

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் சட்டத்திற்கு முரணான வகையில் இந்தியாவினால் உடைமையாக்கிக்கொள்ளப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் அவர்களுடன் எப்போதும் உடன்நிற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். உதவிகளை இழந்திருக்கும் அவர்களுக்காக நாம் எம்மால் இயலுமானவரை குரலெழுப்புவோம். சட்டத்திற்கு முரணாகக் கையகப்படுத்தப்பட்டிருக்கும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் அதனால் இப்பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு அறியப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியின் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியும் வாசிக்கப்பட்டது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானின் 74 ஆவது சுதந்திரதினத்தில் எனது நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முகம்மது அலி ஜின்னாவின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான அர்ப்பணிப்புக்களை இந்த நாள் நினைவுறுத்துகின்றது.

ஒட்டுமொத்த உலகமும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நாம் இந்த சுதந்திரதினத்தை நினைவுகூர்கிறோம். வைரஸ் பரவல் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளடங்களாக அனைத்துத்துறைகளிலும் பெருமளவான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் கடந்த காலங்களில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களிலும் இருந்து மீண்டுவந்ததைப் போன்று இதிலிருந்தும் மீளவேண்டும். இவ்வேளையில் தமது உயிர்களையும் பணயம் வைத்து மக்களைக் காக்கும் உயர்பணியில் ஈடுபட்டிருக்கும் வைத்தியர்கள், தாதியர்கள், பாதுகாப்புப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.