நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைந்த பின்னடைவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசார நடவடிக்கைகளின் போது தமிழ்த் தலைவர்கள் என்று கூறுபவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு மோதிக்கொண்டமையும் ஒரு தரப்பை மறுதரப்பு சந்திக்கிழுத்து முட்டி மோதிக் கொண்டமையும் தமிழ் மக்கள் அறியாத விடயமல்ல.
இதன் காரணமாகவே இருந்ததையும் இழந்த நிலைக்கு சென்றுள்ளனர். இவ்வாறானதோர் நிலைமை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முழுமையாக சவால்களுக்குள்ளாக்கி உள்ளமையை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்களா என்பதும் புரியாததொன்றாகவே உள்ளது.
தமிழ் மக்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய்ந்த காலம் இன்று மலையேறிவிட்டதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் செயலே அன்றி வெற்றுப் பேச்சல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் கடந்த வடமாகாணசபையோடு சீர்குலைந்த கையோடு தமிழ் தலைவர்களின் நடவடிக்கைகளில் வெறுப்புற்ற தமிழ் மக்கள் தேர்தலோடு இவர்களுக்கு தகுந்த பாடம் கிட்டும் என வெளிப்படையாகவே கூறி வந்தார்கள்.
அதுமாத்திரமன்றி தமிழ் தலைமைத்துவங்கள் கேட்பதை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கொடுத்தாலே போதும் அவர்களே முட்டிமோதி அனைத்தையும் இல்லாது செய்து விடுவார்கள் என தமிழ் மக்கள் பரவலாகவே பேசிக் கொண்டது இன்று நிரூபணம் ஆகிவிட்டதையே காணமுடிகின்றது.
அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு விட்டுக்கொடுப்புடன் நடந்திருந்தால் தமிழ் தரப்பு இந்த அளவு மோசமான நிலைக்குச் சென்று இருக்காது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மாத்திரமன்றி அரசியல் ரீதியான போராட்டமும் இன்று கேள்விக்குறியாகி உள்ளதையே காணமுடிகின்றது.
இது இவ்வாறிருக்க வடக்கிலிருந்தும் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தலில் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவான தலைவர் ஒருவரை தெரிவுசெய்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கென தலைமை இன்றி சிதறிப் போய் உள்ளனர் . இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுக்க தமிழ் தரப்பு அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரோ சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார் .
இவை அனைத்துமே வரவேற்க வேண்டிய விடயங்களளே, எனினும் தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் தோன்றியிருந்தால் வடக்கில் மேலும் தமிழ் தலைவர்கள் வெற்றிவாகை சூட வாய்ப்பேற்பட்டிருக்கும். அவை அனைத்தையும் சிதறச் செய்த பெருமையும் கூட்டமைப்பினரையும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அணியினரையுமே சாரும் என தமிழ் மக்கள் கூறுகின்றனர் .
இவை அனைத்துக்கும் மேலாக தேர்தல் காலங்களில் முட்டி மோதிக் கொள்வதும் பின்னர் தேர்தல் முடிந்த கையோடு ஒற்றுமை குறித்து பேசுவதும் தமிழ் அரசியல்வாதிகளுக்கே உரிய சிறப்பம்சங்கள் என்றால் தவறாகாது.
எவ்வாறெனினும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மறந்து போகக் கூடாது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM