இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று எனக்கு நினைவு வருகிறது.
இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வில் மத்திய அரசின் தேர்வாணைக் குழுவின் மூலம் தேர்ச்சிப் பெற்று அகில இந்திய வானொலியில் 1991 ஆம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக கோயம்புத்தூர், சென்னை, புதுச்சேரி உட்பட பல இடங்களில் நான் பணியாற்றிவிட்டு சென்னை வானொலி நிலையத்துக்கு மீண்டும் திரும்பிய போதுதான் ஊடகத்தின் உச்சம் என்று அறியப்படும் பிபிசிக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த ஆர்வம் மேலோங்கியது.
லண்டன் பிபிசியின் தமிழோசையில் பணிக்குச் செல்வதாக இருந்தால் இலங்கையின் அரசியல், சமூகச் சூழல், பொருளாதார நிலைமை, ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியம், இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள், முஸ்லிம்களின் தனித்துவம், இன முரண்பாடுகள் போன்ற விடயங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது.
அதனால் பலரைத் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து தகவல்களையும், அனுபவத்தையும் பெற்றுக் கொண்டு என்னால் முடிந்த அளவுக்கு இலங்கை குறித்து வாசித்தும் குறிப்புகளை எடுத்துக் கொண்டேன்.
பிபிசி நடத்திய எழுத்துத் தேர்வில் சித்திபெற்று நேர்முகத் தேர்வு நாளும் வந்தது. அதில் அறிமுகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, கேட்கப்பட்ட முதல் கேள்வி, ``நீங்கள் வீரகேசரி வாசிப்பதுண்டா``?
``கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் அதை வாசிக்கும் வாய்ப்பு அண்மைக் காலத்தில் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் சென்னையில் அந்தப் பத்திரிகை கிடைப்பதில்லை. நூலகங்களிலும் காண முடியவில்லை. எனினும் வீரகேசரி குறித்து எனது தந்தைக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்`` என்று நான் பதிலளித்தேன்.
எமது சிறுபிராயத்தில் அன்றாடம் இரண்டு பத்திரிகைகள் வீட்டுக்கு வரும் வகையில் பெற்றோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து
எங்களது பொது அறிவும், அரசியல் சமூக விடயங்கள் குறித்த புரிதலும் அதிகரிக்க வேண்டும் என்பதே பெற்றோர் நோக்கம்.
அந்த இரண்டு பத்திரிகைகள் ஆங்கிலத்தில் `தி இந்து` தமிழில் `தினமணி`. அவ்வப்போது தந்தை வீரகேசரி இதழ் குறித்து வீட்டில் பேசுவதையும் கேள்விப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தை கூறுவார் `` இது சிலோன் தமிழ் பத்திரிகை, நம்மூரிலிருந்து சென்றவர்கள் ஆரம்பித்தது. நேர்மையாக நடுநிலைமையுடன் செய்திகள் இருக்கும். தமிழ்நாட்டில் தினமணி போன்று சிலோனில் வீரகேசரி`` என்பார்
இலங்கையிலிருந்து எங்கள் குடும்ப நண்பர்கள் தமிழகம் வரும்போது அவர்களது பயணப் பொதியுடன் வீரகேசரி பத்திரிகையும் கையிலிருக்கும். சிலோன் பத்திரிகை எனும் ஆர்வத்துடன் வீட்டிலுள்ளோர் பார்ப்போம்.
பின்னர் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேர்வாகி பிபிசி தமிழோசைப் பணிக்காக லண்டனுக்குச் சென்றபோது நேர்முகத் தேர்வில் என்னைக் கேள்வி கேட்டவர்களுக்கே இலங்கை குறித்து எனக்கிருந்த புரிதல் அளவுக்கு புரிதல் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். அது இலங்கைத் தொடர்பில் தமிழோசையின் ஒலிபரப்பிலும் வெளிப்பட்டது.
பின்னர் இரு தசாபதங்களாக அன்றாடம் நான் வீரகேசரியை வாசிக்காத நாளில்லை என்பதும், பின்னர் நானும் அப்பத்திரிகையில் கட்டுரை எழுதுவேன் என்பதும் காலத்துக்கும் எனக்கு மகிழ்ச்சியளிக்கும் நினைவுகளாகவே இருக்கும்.
அன்றாடம் வீரகேசரியில் முக்கியச் செய்திகள் என்னவென்று தமிழோசையின் மூத்த இலங்கைச் செய்தியாளர்கள் மட்டக்களப்பு உதயகுமார் மற்று வவுனியா மாணிக்கவாசகம் ஆகியோரிடம் கேட்பது வழமையானது.
பிபிசி திமிழோசையில் நான் பணியாற்றிய காலம் முழுவதும், அன்றாடம் வீரகேசரியை வாசிக்காமல் இருந்ததில்லை. அப்படியிருக்கவும் முடியாது. நடுநிலை நாளேடு என்பதற்கான சிறந்த உதாரணமாக இன்றளவும் அப்பத்திரிகை திகழ்கிறது என்பது உண்மை.
பக்கச்சார்பற்ற செய்திகளை, மக்கள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் வசன நடையில் வீரகேசரி இருந்து வருவது அதன் தனிச் சிறப்பு. இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இன்று அகவை 90ஐ காணும் வீரகேசரி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் காலம் வெகு தொலைவில்லை.
தமிழர்களின் சாத்வீகப் போராட்டக் காலத்திலும் ஆயுதப் போராட்டக் காலத்திலும் தமிழ்த் தேசியத்துக்கு பக்கபலமாக ஓங்கி குரல் கொடுத்த பெருமை வீரகேசரிக்கு உண்டு. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக அவர்களின் பிரஜாவுரிமை, காணி உரிமை, அடிப்படைத் தேவைகள், அவ்வப்போது நடைபெறும் ஊதிய உயர்வுப் போராட்டங்கள் போன்ற விடயங்களில் தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.
இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதைக் காலந்தோறும் தனது செய்திகள் மற்றும் கட்டுரைகள் மூலம் சமூகப் பொறுப்புடன் உணர்த்திய பெருமை வீரகேசரியைச் சாரும்.
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்காக காழ்ப்புணர்ச்சியின்றி குரல்கொடும் பத்திரிகை வீரகேசரி.
காலவோட்டத்தில் பல பத்திரிகைகள் கரைந்துவிட்ட நிலையில், தனது தனித்துவத்தை இழக்காமல், காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டு பீடுநடை போடுகிறது வீரகேசரி. அந்த விடயத்தில் `தினமணியை`விட வீரகேசரி முன்னிலையிலுள்ளது.
பல சாதனைகளைப் படைத்து இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள வீரகேசரிக்கு தான் விரும்பியபடி தமிழர்கள் தாயகத்தில் 1980களில் ஒரு பிராந்தியப் பதிப்பை வெளியிட வேண்டும் என்றிருந்த எண்ணம் ஈடேற முடியாமல் போனது குறித்து பலரைப் போலவே எனக்கும் அந்த வருத்தமுண்டு.
தற்போது டிஜிட்டல் உலகிலும் கால்பதித்துள்ள அவர்கள் அதை பல்துறை ஊடகமாக மாற்றி வருவதையும் நான் காண்கிறேன். ஒலி,ஒளிப் படைப்புகள் ஆகியவையும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அது மேலும் விரிவடைந்து சிறக்க வேண்டும் என்பதே எம்மைப் போன்றவர்களின் அவா.
மலையகப் பகுதியிலுள்ள மக்களின் குரலாக வெளிவரும் `சூரியகாந்தி` நான் விரும்பிப் படிக்கும் ஒரு இதழ். மலையகம் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ளவும், ஆவணப்படுத்த விரும்புவோர்களுக்கும் இது ஒரு இன்றியமையாத கையேடாக உள்ளது. மலையக மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள், ஊதிய உயர்வு, சமூகப் பொருளாதார அரசியல் மேம்பாடு போன்ற பல விடயங்களில் `சூரியகாந்தி` காலத்தின் கண்ணாடி என்றே சொல்லலாம்.
இலங்கை சரித்திரத்தில் தமிழர்களின் பிரச்சினைகள், பார்வைகள், போராட்டங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதில் வீரகேசரியின் பங்கு ஈடு இணையற்றது.
வீரகேசரி இலங்கை சரித்திரத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது திண்ணம்.
வீரகேசரியின் ஒரு வாசகன், கட்டுரையாளர் என்கிற முறையில் அது மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
சிவா பரமேஸ்வரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM