கடந்த வாரம் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை மேற்கோளிட்டு, இராணுவத்திற்கு பெரும் அதிகாரங்களை வழங்கும் அவசரகால சட்டத்துக்கு லெபனான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெய்ரூட் குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி அமைச்சரவை இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்தது. இந்த வெடிப்பில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6,000 பேர் காயமடைந்தனர்.

வெடிப்பினையடுத்து லெபனானில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் அந் நாட்டு பிரதமரும், அமைச்சரவையும் இராஜினாமா செய்வதாக அறிவித்தது.

இந் நிலையில் தலைநகரில் தொட்ந்து அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலேயே  இராணுவத்துக்கு இவ்வாறு பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அவரசகால நிலை இராணுவ சட்டத்தின் கீழ், சுதந்திரமான பேச்சு, சட்டசபை சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், வீடுகளுக்குள் நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எவரையும் கைது செய்யவும் முடியும்.

அத்துடன் நாட்டின் இராணுவ நீதிமன்றங்களில் நீதித்துறை நடவடிக்கைகள் நடைபெறவும் உள்ளன.

எனினும் கொரோனா வைரஸ் பரவலினால் சிவில் அரசாங்கம் ஏற்கனவே அதிகரித்த அதிகாரங்களுடன் செயல்பட்டு வருவதாகக் கூறும் உரிமைக் குழுக்கள் மற்றும் பிற விமர்சகர்களால் இந்த நடவடிக்கை விமர்சிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிகப் பெரிய அணுசக்தி அல்லாத குண்டுவெடிப்புகளில் ஒன்றான இந்த பெரிய வெடிப்பு, ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக பெய்ரூட்டின் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,750 டொன் அமோனியம் நைட்ரேட்டே காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.