– வேல் தர்மா
மக்கள் சீனக் குடியரசு 1949-ம் ஆண்டு உருவானதில் இருந்தே படைத் துறைத் தொழில்நுட்பங்களை ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் நிகராக உருவாக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை மேற் கொள்கின்றது. தற்போது சீனா உலகத்தில் தனது நிலை தொடர்பாக அவசரம் கலந்த அக்கறை காட்டுகின்றது.
2021-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் 2049-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் சீனா உலக அரங்கில் மேன்மை மிக்க நாடாக கருதப் பட வேண்டும் என சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் விரும்புகின்றார்கள்.
சீனாவின் தற்போது இளையோர்களாக இருப்பவர்கள் வயதானவர்களாக மாற முன்னர் சீனாவை உலகின் முதன்மை மிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செல்லச் செல்ல சீனாவில் இளையோர் தொகை குறைந்தும் வயோதிபர் தொகை அதிகரித்தும் செல்கின்றது.
வரலாற்றுப் பெருமை மிக்க உளவுத் துறை
சீனாவின் கேந்திரோபாய நோக்கங்களுக்கும் அதன் கனவுகளை நிறைவேற்றவும் உளவு அவசியம் என்பதை சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். Sun Tzu என்ற சீனப் போரியியலாளர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே படையினரின் நகர்வுக்கு முன்னோடியாகவும் முக்கியமாகவும் அமைவது உளவாளிகளே என்றார்.
அந்தச் சிந்தனைத் தொடர்ச்சி சீனர்களை உலகின் மிகச் சிறந்த இணையவெளி உளவாளிகளாக உருவாக்கியுள்ளது. நவீன சீன உளவுத்துறை கடந்த முப்பது ஆண்டுகளாகவே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்குள் அது பல நூற்றாண்டுகளாக உளவுத்துறையை வைத்திருக்கும் நாடுகளின் உளவுத் துறையை விஞ்சி விட்டது.
சீனா திருடுவதாக பரவலான குற்றச் சாட்டு
சீனாவின் திருட்டு வேலைகளால் ஆண்டு தோறும் தமக்கு இரு நுறூ முதல் முன்னூறு பில்லியன் டொலர் இழப்பீடுகள் ஏற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இந்தக் குற்றச் சாட்டை சீனா மறுக்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில் நுட இடைவெளியை குறக்க அல்லது இல்லாமற் செய்ய சீனா பல நட்ட கெட்ட வழிகளில் முயல்கின்றது. 1. அமெரிக்காவின் உயர் தொழில்நுட்பங்களை களவாக விலை கொடுத்து வாங்குதல். 2. அமெரிக்க படைத்துறைத் தொழில்நுட்பங்களை இணையவெளித் திருட்டு மூலம் அபகரித்தல்.
அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய போர்விமானங்களின் தொழில்நுட்பங்களை சீனா திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 3. சீன மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்பித்தல். 4. அமெரிக்கர்களை சீன உளவாளிகளாக்கி அவர்கள் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை பெறுதல். 5. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குள் சீனா மறைமுகமாக நிதி உதவி வழங்கி ஆராச்சிகளை செய்து தொழில்நுட்பங்களைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமெரிக்காவிற்கு பெரும் சவால்
சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களைத் திருடுவது அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இணையவெளித் திருட்டை தடுக்க முடியாமல் அமெரிக்கா சீனாவை அதை நிறுத்தும் படி வற்புறுத்தியது. அதற்கு சீனா இணங்க மறுத்த படியால் அமெரிக்கா சீனா மீது வர்த்தக்ப் போர் தொடுத்தது. சீனாவின் திருட்டுடன் தொடர்புடைய 24 பேரை 2019-ம் ஆண்டிலும் 2020 முதல் இரண்டு மாதத்தில் 19 பேரையும் அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறையினர் கைது செய்தனர்.
மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசாரணைகள் நடக்கின்றன. 2019 ஓகஸ்ட் மாதம் ஒரு பயணப் பை நிறைய கதிர்வீச்சுத்தாக்கங்களால் பாதிப்படையாத மைக்குறோசிப்ஸ்களுடன் ஹொங் கொங் பயணமாகவிருந்த 33 வயது சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டார்.
அவர் கடத்த முயன்றவை ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பாவிக்கப்படும் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்ட இலத்திரனியல் கருவிகளாகும். அமெரிக்காவின் University of Tennessee இன் பொறியியல் துறை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுற்காக ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. அதன் பொறியியற்றுறைப் பேராசிரியல் சீனாவுடன் இணைந்து இரகசிய ஆய்வு செய்வதமைக்காகக் 2020 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
2019 டிசம்பரில் அமெரிக்கப் படைத்துறைக்கு உபகரணங்களை வழங்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று சீனாவில் உற்பத்திய செய்த உபகரணங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தவை எனச் சொல்லி அமெரிக்கப் படைத்துறைக்கு விற்பனை செய்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களில் உளவு பார்க்கக் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம்.
சீன உளவுத்துறைப் பிரிவுகள்
இணையவெளியில் படைத்துறை இரகசியங்களைத் திருடுவதற்கு சீனப் படைத்துறையின் General Staff Department (GSD) என்னும் பிரிவு பொறுப்பாக இருக்கின்றது. இதை விரிவு படுத்தும் போது 2PLA, 3PLA, 4PLA, என புதிய இணையவெளிஉளவுத்துறைகளும் சீனப் படைத்துறையால் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சீன உளவுத்துறைகள்:
1. Military Intelligence Department
2. General Staff Department (2PLA)
3. Third Department of the Peoples Liberation Army (3PLA)
4. Signals Intelligence (SIGINT)
5. Joint Staff Department
6. Strategic Support Force
சீனாவின் உளவு முறைகள்
சீனா முக்கியமாக ஐந்து வகையான உளவுகளைச் செய்வதாக கருதப்படுகின்றது:
1 தேன் கிண்ணம்: இது ஆண் பெண் உறவை வைத்து திரட்டப்படும் முறையாகும். கள்ளக் காதலை அறிந்து அதை வெளிவிடுவதாக மிரட்டி தகவல்களைப் பெறுவதும் இதில் அடங்கும்.
2. ஆயிரம் மணல்: இதன் மூலம் தேவையற்ற பல தகவல்களைத் திரட்டி பின்னர் அவற்றை ஒன்றாகப் பொருத்திப் பார்த்து இரகசியங்களை அறிவதாகும்.
3. சித்திரவடிவு: இது பல்கலைக்கழகங்களில் இருந்து பல தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து இரகசியங்களை அறிதல்
4. விதையிடல்: இது பரவலாகப் பாவிக்கப்படும் ஓர் உளவு முறையாகும். தமது ஆட்களை எதிரியின் நிறுவனங்களுக்குள் அமர்த்தி உளவு பார்ப்பதாகும்.
5. குடிமக்கள் உளவு: உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட சீனாவின் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழுகின்றனர். அவர்களை சீனா தனது உளவாளிகளாகப் பாவிக்கின்றது.
ஹுவாவே
ஹுவாவே நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கியதன் மூலம் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் முந்திக் கொண்டு 5ஜீ அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. உலக கைப்பேசி தொடர்பாடலில் ஹுவாவே ஆதிக்கம் செலுத்தினால் அதனால் உலகெங்கும் உளவுத் தகவல்களை திரட்ட முடியும் என அமெரிக்கா அஞ்சுகின்றது.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று (அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:585)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM