-கார்வண்ணன்
பொதுத்தேர்தல் முடிவுகள் சில அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் முக்கியமானவர்கள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பில் தோல்வியடைந்திருக்கிறார்.
கடந்தமுறை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டவர்களான ஈ.சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோரும், தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
கடந்த முறை ரெலோ சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று, இந்தமுறை தமிழ் அரசுக் கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட கோடீஸ்வரனும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரடியாக கிடைத்திருக்கின்ற 9 ஆசனங்களில், 5 ஆசனங்கள் மாத்திரமே, தமிழ் அரசுக் கட்சியினால் பெறப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சிறிதரன், சுமந்திரன் ஆகியோரும், திருகோணமலையில் இரா.சம்பந்தனும், வன்னியில் சார்ள்ஸ் நிர்மலநாதனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் மாத்திரம் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புளொட் சார்பில் சித்தார்த்தனும், ரெலோ சார்பில் வன்னியில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், விநோகராதலிங்கம் ஆகியோரும், மட்டக்களப்பில் இருந்து கோவிந்தம் கருணாகரனும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
தேசியப்பட்டியல் ஆசனத்தை தமிழ் அரசுக் கட்சியே நிரப்பிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கக் கூடிய நிலையில், 6 : 4 என்ற அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சிக்கும், பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான விகிதாசாரம் இருக்கப் போகிறது.
2015இல் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட போது தமிழ் அரசுக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான விகிதாசாரம், 11 : 5 என்ற அடிப்படையிலேயே இருந்தது.
பின்னர் சிவசக்தி ஆனந்தன் மற்றும், வியாழேந்திரன் ஆகியோரின் வெளியேற்றத்துக்குப் பின்னர், 11: 3 என்று, தமிழ் அரசுக் கட்சி வலுப்பெற்றது.
இடையில் ரெலோவின் பக்கத்தில் இருந்து கோடீஸ்வரன் இழுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட, 12: 2 என்ற அடிப்படையிலேயே விகிதாசாரம் இருந்தது.
இந்த நிலையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரண்பாடுகள் ஏற்பட்ட போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற வேளைகளிலும் பங்காளிக் கட்சிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், முடிவெடுப்பவர்களாக இரா.சம்பந்தனும், சுமந்திரனுமே இருந்தனர். பெரும்பாலும் சுமந்திரனின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் அரசுக்கட்சியே அதிகாரம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளையும், ஏனைய கட்சிகளின் குரல்களை நசுக்குகிறது என்ற குமுறல்களையும் வெளிப்படுத்தியது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக புளொட்டும், ரெலோவும் இருந்தபோதும், பல சமயங்களில் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்தது.
இதனால், பல நேரங்களில் ரெலோவும், புளொட்டும் வெளியே தள்ளப்படும் விளிம்பு வரைக்கும் கூட சென்று வந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சமயங்களில் சறுக்கல்களைச் சந்திப்பதற்கும், தமிழ் அரசுக் கட்சியின் ஏகபோகம் காரணமாக இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறிய போதும், தமிழ் அரசுக் கட்சியின் ஏகபோகமே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தது.
ரெலோவுக்குள் இருந்து சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் வெளியேறிச் சென்றதற்கும் கூட, தமிழ் அரசுக் கட்சியின் ஏகபோகத்துக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் முடிவெடுக்காமல் இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.
இந்தமுறை தேர்தலுக்கான ஆசனப் பகிர்வின் போதும் தமிழ் அரசுக் கட்சியே பெரும்பாலும் முடிவுகளை எடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் காணப்படும் இழுபறிக்கும், தமிழ் அரசுக் கட்சியின் இந்தப் போக்கே முக்கியமான காரணம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக தொடங்கிய பிரச்சினையை முன்வைத்தே அதிலிருந்து கட்சிகளும், பிரமுகர்களும் வெளியேறிச் சென்றனர்.
தமிழ் அரசுக் கட்சியின் வகிபாகம், கோலோச்சியதன் விளைவாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.
16 ஆசனங்களில் இருந்து 10 ஆசனங்களுக்கு கீழ் இறங்கி வந்திருப்பதற்கு தமிழ் அரசுக் கட்சியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழ் அரசுக் கட்சியின் பங்கு குறைந்திருப்பதானது, எதிர்காலத்தில் அதன் வகிபாகத்தை கேள்விக்குட்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்.
கூட்டமைப்பு இதுவரை சந்தித்து வந்த சரிவுகளில் இருந்து பாடம் கற்கவோ, தவறுகளைத் திருத்திக் கொள்ளவோ இல்லை.
தொடர்ந்தும் அவ்வாறான பாதையில் பயணிக்க முடியாது, வரும் காலத்தில், தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையான போக்கில் செயற்பட முனைந்தால், அதற்கு புளொட்டும், ரெலோவும் கட்டை போட்டு நிறுத்த முற்படும்.
ஏனென்றால், அவற்றிடம், நான்கு ஆசனங்கள் இருக்கின்றன. அதைவிட, இந்தக் கட்சிகள் வெளியே சென்றால் தமிழ் அரசுக் கட்சி பலவீனப்பட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது.
திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலானது.
யாழ்ப்பாணத்தில் சுமந்திரன், சிறிதரனின் வெற்றியை வைத்து தமிழ் அரசுக் கட்சியின் பலமாக கருத முடியாது. கட்சியின் தலைவரும், செயலாளரும் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.
வன்னியில் சாள்ஸ் நிர்மலநாதன், வெற்றி பெற்றிருக்கிறார். அவர் சுமந்திரனுக்கு எதிராக பகிரங்கமாக குரல் எழுப்பியவர்.
ஆக, சுமந்திரனின் ஆதிக்கம் கூட்டமைப்புக்குள் இனி தொடருமா என்ற கேள்வி இருக்கிறது. அவர் தனது போக்கில் இருந்து விலகி ஆக்கபூர்வமாக செயற்படத் தவறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே அவருக்கு எதிரான குரல்கள் வலுக்கும். கலகம் வெடிக்கும்.
கூட்டமைப்பு இப்போது முன்னரை விடப் பலவீனமடைந்துள்ள நிலையில், அந்தக் குரல்களை அடக்குவதற்குப் பதிலாக, அந்தக் குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய நிலை சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் ஏற்படலாம்.
இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு, கடந்த கால தவறுகளை மறுஆய்வு செய்து கொள்ளாவிடின், அடுத்து நடக்கும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM