ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸில் வெளியான சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தலின், முடிவுகளையடுத்து நாடு முழுவதும் அரங்கேறி வரும் போராட்டங்கள்  மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக மூன்று இரவுகளில் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகால ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை கூறியதை அடுத்து, அமைதியான ஆர்ப்பாட்டங்கள்கள் பெலாரஸில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கு எதிராக பெலாரஷ்ய அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிரித்துள்ளதுடன், இதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைத் தலைவர் கண்டித்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை பொலிஸார், அடித்து வன்முறையில் தடுத்து வைத்திருப்பதாக அதிகமான காட்சிகள் தொடர்ந்தும் வெளி வந்த வண்ணமே உள்ளன.

ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடியவர்களில், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா, தனது குழந்தைகளுடன் லிதுவேனியாவுக்குச் சென்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் இறப்பர் குண்டுகளை பயன்படுத்தியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கணெ்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள்  மீது தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 25 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்திருந்த போது அவது உடல்நிலை திடீரென மோசடைந்துள்ளது.

இதன் பின்னர் தென்கிழக்கில் கோமலில் உள்ள ஒரு வைத்தியசாலையில் இளைஞன் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில், அவருக்கு இதய பிரச்சினைகள் இருந்ததாகவும், பல மணி நேரம் பொலிஸ் வேனில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

அத்துடன் இதற்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.