நீரிழிவு நோய், ரத்த அழுத்த பாதிப்பு போன்ற தொற்றா நோய்கள் இல்லாதவர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதித்த கொரோனா வைரஸ் தொற்று அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதய பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்பு , சுவாச கோளாறுகள் போன்ற பல்வேறு பாதிப்புகளுடன் இருப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால், அவர்கள் மரணம் அடையும் சூழல் ஏற்படுகிறது. 

இந்நிலையில் உடலில் எந்த ஆரோக்கிய பாதிப்பும் இல்லாதவர்களுக்கு அதாவது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு கொரோனித் தொற்று பாதித்தால், அவர்களுக்கும் திடீரென்று மாரடைப்பு ஏற்படுகிறது என்று புதிய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான ஆய்வுகள், தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஐந்து நோயாளிகளில் ஒருவருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா தொற்றாளர்களில் 20 சதவீதத்தினர், தங்களுக்கு மூச்சு திணறலுடன் நெஞ்சு வலியும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் 80% சதவீதத்தினருக்கு மேல் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதூருக்கிறது. அத்துடன் இவர்களுக்கு எப்போதும் சமூக இடைவெளியுடன் கூடிய சிகிச்சை வழங்க வேண்டியதிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் கிருமிகள் இதயத்தில் உள்ள பிரத்யேக ஏற்பிகளுடனும் இணைந்து, மாரடைப்பை உருவாக்க காரணமாகிவிடுகிறது. சிலருக்கு இதய தமணிகளில் தடைகள் ஏதும் ஏற்படாமல் இதய செயலிழப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், இது தொடர்பான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல நாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளினால் மக்கள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று அதிகளவில் உடற்பயிற்சி செய்தாலும் இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

டொக்டர் ஆர்த்தி.

தொகுப்பு அனுஷா.