(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இன்று சுமார் 7 மணி நேரம் சிறப்பு விசாரணைகள் நடாத்தப்பட்டன.   சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் முற்பகல் 9.30 மணியளவில் ஆஜரான முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம்  மாலை 4.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்கனவே இரு தடவைகள் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்களால் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று 3 ஆவது தடவையாகவும்  இவ்வாறு  விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தார். 

தேர்தல் காலத்தில் அழைக்கப்பட்டிருந்த போதும், அது தொடர்பில் கோட்டை நீதிவானுக்கு தெளிவுபடுத்தி, அந்த திகதி இன்றைய தினத்துக்கு மாற்றிக்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படியே இன்று கொழும்பு - கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் ரிஷாத் பதியுதீன் ஆஜரானார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலைதாரியான இன்சாப் அஹமட் எனும்  பயங்கரவாதி தொடர்பில்  சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்போது அந்த குண்டுதாரிக்கு  சொந்தமான வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்புத் தொழிற்சாலை தொடர்பில் தனியான விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக "கொலொஸஸ்" நிறுவனத்திற்கு (குண்டுதாரியின் செப்புத் தொழிற்சாலை) செப்பு விநியோகித்த போது இடம்பெற்றதாக கூறப்படும்  மோசடிகள் தொடர்பில் தனியாக விசாரணைகளை சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவின் இலக்கம் மூன்று விசாரணை அறை பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகேவின் கீழான குழு முன்னெடுத்துள்ளது.

 அது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  அதில் முதலில் சி.ஐ.டி. தலைமையகத்துக்கும் பின்னர் வவுனியாவில் உள்ள சி.ஐ.டி. கிளையிலும் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடாத்தப்பட்ட நிலையிலேயே மீளவும் இன்று சி.ஐ.டி. தலைமையகத்தில் வைத்து விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.