(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவில் உயிரிழந்துவிட்டதாக நம்பப்படும் அங்கொட லொக்கா எனும் லசந்த சமிந்த  பெரேராவின் பாதாள உலக கும்பலின் திறமையான துப்பாக்கிதாரியாக கருதப்படும் சொல்டா என்ற அசித்த ஹேமதிலக பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சொல்டா, முலேரியா பொலிஸ் பிரிவின் சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் உள்ள  இடமொன்றில் மறைத்து வைத்துள்ளதாக கூறப்பட்ட ஆயுதங்களை காட்டுவதற்காக  பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்ட போது, பொலிஸார் மீது கைக் குண்டு தாக்குதல் நடாத்த முறப்பட்டதாகவும் அதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

நேற்று  இரவு 9.45 மணியளவில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன் சம்பவத்தில் 35 வயதான சொல்டா படு காயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் அவர் அங்கு  உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறினார்.

சொல்டா அங்கொட லொக்காவின் குழுவில் இருந்த மிகத் திறமைவாயந்த துப்பாக்கிதாரியாவார்.  கடந்த 2017 நவம்பர் 30 ஆம் திகதி பன்னிபிட்டிய - ருக்மல் பகுதியில் மஞ்சுளா சந்துனி எனப்படும் அழகுக் கலை நிலைய பெண் ஒருவரை சுட்டுக் கொன்றமை, 2018 இல் முல்லேரியா பகுதியில் பொலி ரொஷான் எனப்படும் ரொஷான் பிரேமதிலக்கவை சுட்டுக் கொன்றமை ஆகிய இரு சம்பவங்களின் போது,  சொல்டாவே துப்பாக்கிதரியாக  செயற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

 

அங்கொட லொக்கா, இந்தியாவில் இறப்பதர்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சொல்டாவுக்கு, கயான் எனும் பாதாள உலக உறுப்பினரை கொலை செய்ய ஒப்பந்தம் ஒன்றினை கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இவ்வாறான பின்னணியிலேயே கைது செய்யப்பட்ட சொல்டா ஆயுதம் காண்பிக்க அழைத்து செல்லப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.