(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

France prepares response after China lifts meat import ban

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் தமது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளனர்.

தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் புதிய அமைச்சரவைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்றன், சுபீட்சமானதும் அமைதியானதுமான இலங்கையை உருவாக்குவதற்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் அதேவேளை இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தனவிற்கு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி வாழ்த்துத் தெரிவித்திருப்பதாக சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அத்தோடு தினேஷ் குணவர்தனவுடனான நட்புறவிற்கு வாங் ஜி மிகுந்த மதிப்பளிப்பதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதாகவும் தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

'சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தல் ஆகிய விடயங்களை மையப்படுத்தி இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்' என்று தெரிவித்திருக்கிறார்.