(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும் தெரிவாகாதவர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை உரிய காலத்தில் கையளிக்க தவறுபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக கருதப்படுவர் என்பதோடு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அவர்களைப் பற்றி அறிக்கையிடும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இன்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் திருத்தச் சட்டத்திற்கமைய, 1975 ஆம் ஆண்டு இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வேட்பாளர் தனது சொத்துக்களும் பொறுப்புக்களும் பற்றி வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் அல்லது முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த வேட்பாளர்கள் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்கள் இது வரையில் தமது சொத்துக்களும் பொறுப்புக்களும் பற்றிய வெளிப்படுத்தல்களை கையளிக்க முடியாதவர்கள் உடனடியாக அந்தந்த தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாகவோ அல்லது நேரில் வந்து தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும்.

இதே போன்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் வெளிப்படுத்த வேண்டும்.

சொத்து விபரங்களை வெளிப்படுத்தாவர்கள் 1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் திருத்தச் சட்டத்திற்கமைய , 1975 ஆம் ஆண்டு இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற தவறை இழைப்பவர்களாகக் கருதப்படுவதோடு , இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அவர்களைப் பற்றி அறிக்கையிடும்.