வேலைத் தளத்துக்கு ஒரு சிம் , வீட்டுக்கு ஒரு சிம் ,மேலும் ஒரு சிலர் தங்கள் சட்டவிரோத செயலுக்கு ஒரு சிம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பலரும் தங்கள் கைபேசிகளில் பயன்படுத்துவது ஒன்றும் இரகசியமல்ல. பெரும்பாலானவர்கள் தங்கள் சட்டவிரோத செயற்பாடுகளை இதனூடாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர்கள் மற்றும் அடையாள அட்டை காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி போலியாக தங்கள் முகவரிகளையிட்டு அதனை பெற்று வருகின்றனர் .
வீதிகள்தோறும் சிம் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதும் அங்கீகாரமற்ற கடைகளில் சிம் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதும் இதற்கான பிரதான காரணமாகும்.
இதன் பாரதூரத்தை எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை. அப்பாவி மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான பணம் பறிக்கப்படுவதும் இந்த போலி சிம் அட்டைகளை பயன்படுத்தியேயாகும்.
அதிர்ஷ்ட லாபச் சீட்டு விழுந்துள்ளதாகவும் அதனைப் பெற வேண்டுமானால் குறித்த தொகையை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஒரு கும்பல் திட்டமிட்டு இவ்வாறு செய்து வருகின்றது.
எனினும் அவர்களை எவராலும் தடுத்துநிறுத்த முடியவில்லை. எனினும் இந்தியாவை பொறுத்தமட்டில் ஒருவர் சிம் அட்டை ஒன்றை பெறுவது என்பது இலகுவானதல்ல. பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தவும் மோசடிகளை தடுக்கவும் இந்த விதமான கடுமையான விதிகள் அங்கு அமுல் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையிலும் பின்பற்றப்படுவது அவசியமாகும். ஒருவர் அதிக அளவு சிம் அட்டை வைத்திருப்பதையும் போலியான பெயர்களில் அவற்றை
பயன்படுத்துவதையும் உடன் நிறுத்துவது மாத்திரமன்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.
இதேவேளை அங்கீகாரம் அளிக்கப்படாத சிம் அட்டைகளுக்கு இனி அனுமதி அளிக்கப்படமாட்டாது என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது வரவேற்கத் தக்கதாகும்.
மேலும் இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் மேலும் :
இனிவரும் காலத்தில் மக்கள் தமது தேவைகளுக்கென சிம் அட்டைகள் மூலமான தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் போது, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யப்படாத தொடர்பாடல் வலையமைப்புக்களால் விநியோகிக்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவையைப் பெறுவோருக்கு எதிர்வரும் காலத்தில் அச்சேவையைத் துண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற சேவையைப் பயன்படுத்தி வருவோர் மீது இது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் காலம் தாழ்த்தி யேனும் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM