ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள  பாக்கிஸ்தானிய நகரத்தில் ஒரு சந்தையில்  சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் திங்கட்கிழமை மாலை இந்த சக்திவாய்ந்த  குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

"ஆறு முதல் ஏழு கிலோகிராம் எடையுடைய  வெடிபொருட்கள் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் வெடிக்கசெய்யப்பட்டுள்ளதாக" பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா்ர.

குண்டுவெடிப்பில் ஒரு எல்லைப்புற படை வீரர் உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், போதைப் பொருள் தடுப்பு படையினர் சென்ற வாகனத்தை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார்.