தென் சூடானில் இராணுவத்தினருக்கும் ஆயுதமேந்திய பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்பின் அமைதி காக்கும் பணி, செவ்வாயன்று தென் சூடான் பகுதியில் முன்னெடுத்த ஆயுதக் குறைப்பு பயிற்சி தொடர்பான கருத்து முரண்பாட்டினால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் சுட்டிக்காட்டினார்.

பிப்ரவரி மாதம் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட தென் சூடான் ஜனாதிபதி சல்வா கீருக்கும் போட்டியாளரான ரிக் மச்சருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மிகச் சமீபத்திய சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் நிராயுதபாணியாக்கம் செய்யப்படுகிறது.

இந் நிலையிலேயே ஆயுதக் குறைப்பு பயிற்சி தொடர்பான கருத்து முரண்பாட்டினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

தென் சூடான் 2011 இல் சூடானில் இருந்து சுதந்திரத்தை அறிவித்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது ஒரு அழிவுகரமான உள்நாட்டுப் போரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.