காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் (44) மகளும்(19) உயிரிழந்துள்ளனர்.

இவ் வாகன விபத்து மல்வானை - ஹங்வல்ல வீதியில் சமனபத்த பிரதேசத்தில் நேற்று(10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சமனபத்த பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான ரசனா மூர்த்தி சாந்தி குமார்(44) என்பவரும் அவரது மூத்த மகளான பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள " அன்ஸல் லங்கா" நிறுவனத்தில் வேலை புரிந்து வந்த தங்கராசா தரூசிகா மதுவந்தி(19)ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து இடம்பெற்ற வேளையில் கார் மல்வானையிலிருந்து ஹங்வல்ல திசையை நோக்கியும் மோட்டார் சைக்கிள் ஹங்வல்லையிலிருந்து மல்வானையை நோக்கியும் பயணித்துள்ளன.

உயிரிழந்த யுவதி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளதாகவும் கார் அதி வேகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 விபத்தில் உயிரிழந்த தாயினதும் மகளினதும் மரண விசாரணை தொம்பே திடீர் மரண விசாரணையாளர் ஜகத் ஸ்ரீ லாலினால்  தொம்பே வைத்திய சாலையில் நடாத்தப்பட்டதோடு பிரேத பரிசோதனை இன்று(11) கம்பஹா வைத்திய சாலையில் நடைபெறவுள்ளது. 

 கைது செய்யப்பட்டுள்ள காரின் சாரதி (வயது 21)இன்று(11) பூகொடை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

 இது தாடர்பிலான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஜீ.எஸ்.ஆர் சன்ஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.