தந்தையின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்குமாறு பண்டாரமுல்லையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை வற்புறுத்தியதுடன் அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பண்டாரமுல்லையைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் இது குறித்து ஜூன் 16 ஆம் திகதி தலங்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்க அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலக்க சில்வா தனது நண்பராக குறித்த  தொழிலதிபரை ஜூன் 09 ஆம் திகதி தொலைபேசியில்  அழைத்து  தனது தந்தையின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்குமாறு கோரியதாகவும், இதன் போது கொவிட் - 19 தொற்றுகாரணமாக தனது மீன் வர்த்தகம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், உரிய நேரத்தில் நிதி வழங்குவதாகவும் குறித்த தொழிலதிபர் மாலக்க  சில்வாவிடம் தெரிவித்திதுள்ளார்.

எனினும் மாலக்க சில்வா குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக தொழிலதிபரிடம் தொடர்ந்து நிதி கோரியதாகக் கூறப்படுகிறது, இறுதியில் கோபமடைந்த மாலக்க சில்வா ஜூன் 15 அன்று தொழிலதிபருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.