பிடியாணையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர் மேன்முறையீட்டு மன்றில் மனு

11 Aug, 2020 | 10:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த பழைமை வாய்ந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில், தன்னை கைதுசெய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை  வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குருநாகல் மாநகர  மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு வொன்றினை தாக்கல் செய்துள்ளார். 

அவருக்கு மேலதிகமாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் நகர பொறியியலாளரான  சமிந்த பண்டார அதிகாரியும்  இவ்வாறு எழுத்தாணை கோரும் ரீட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுக்களில், குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில அதிகாரி,  பிராந்திய விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர்  ஆர். டி. குலதுங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க,குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் மற்றும் சட்ட மா அதிபர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 சட்டத்துக்கு முரணாக தமக்கு எதிரான  பிடியாணைகள் பெறப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை  வலுவிழக்கச் செய்யுமாறும்  குறித்த இரு சந்தேக நபர்களும்  மேன் முறையீட்டு நீதிமன்றைக் கோரியுள்ளனர். இந் நிலையில் இந்த மனுவானது இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குருணாகல்  மாநகர மேயர், நகர ஆணையாளர் உள்ளிட்ட ஐவரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் கடந்த 7 ஆம் திகதி  உத்தர்விட்டிருந்தார். கடந்த 10 ஆம் திகதிக்குள் அவர்களைக் கைது செய்யுமாறே அவர் உத்தரவிட்டிருந்தார். குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த பழைமை வாய்ந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் அவர்களை இவ்வாறு கைது செய்யுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.  இந்த விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா குருணாகல் நீதிவானுக்கு சமர்ப்பித்திருந்த விஷேட ஆவணங்களையும் பரிசீலித்தே நீதிவான், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சரத் ஜயமான்ன முன்வைத்த விடயங்களையும் ஆராய்ந்து இந்த பிடியாணையைப் பிறப்பித்திருந்தார்.

குருணாகல்  மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதானகே, நகர ஆணையாளர் நுவன் பக்ஷகே  பிரதீப் நிஷாந்த திலகரத்ன,  நகர பொறியியலாளரான  சமிந்த பண்டார அதிகாரி,  தேவையற்ற கட்டுமாணங்களை அகற்றும் அதிகாரியான  அலாவுதீன் மொஹம்மட் சுல்பிகார், பெகோ  இயந்திர சாரதி  லக்ஷ்மன் பிரியந்த ஆகியோரையே   கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் பிராந்திய விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 இந்த ஐவரும் குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் கூட்டாக பொறுப்புக் கூற வேண்டும் என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அவர்கள் தொல்பொருள் கட்டளை சட்டத்தின் 15 ( பி)  பிரிவின் கீழ் பழைமை வாய்ந்த கட்டிடம் ஒன்றினை சேதப்படுத்தியமை  தொடர்பிலும் அதே சட்டத்தின் 31 ஆவது அத்தியாயத்தின் கீழும்  தண்டனை சட்டக் கோவையின் 408 ஆவது அத்தியாயத்துடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபர்கள் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக நியாயமான சந்தேகம் சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

 எனினும் மீள நேற்று முன் தினம் 10 ஆம் திகதி அது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும், பொலிஸார் குருநாகல் மாநகர மேயர் உள்ளிட்ட ஐவரையும் கைது செய்திருக்கவில்லை.  இதனையடுத்து  அந்த ஐந்து பேரினதும் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்த நீதிமன்றம் அவர்களை  நாளை 13 ஆம் திகதிக்குள் கைது செய்ய மீள பிடியாணை பிறப்பித்தது. அத்துடன்  அந்த ஐந்து பேருக்கும் அடைக்கலம்  கொடுப்போர்  தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த பிடியாணை உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருணாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குருநாகல்  பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று, வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தனவுக்கு விடுத்த விஷேட உத்தரவுக்கு அமைய இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இந்த 5 சந்தேக நபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் ஊடாக, அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறான பின்னணியில் இன்று இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு தமது எதிர்ப்பை வெளியிடும் விதமாக குருநாகல் மாநகர சபையின்  அனைத்து ஊழியர்களும் இன்று ஒரு நாள் விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால்   குருநாகல் மாநகர சபை இன்று மூடப்பட்டிருந்ததுடன் மா நகர சபை ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியிருந்தன.

 இவ்வாறான நிலையிலேயே இன்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் மாநகர  மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட இருவர் பிடியாணைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில்   ரிட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55