புதிய அரசும் சர்வதேச நெருக்கடிகளும்

11 Aug, 2020 | 08:20 PM
image

-ஹரிகரன்

தேர்தல் சட்ட மீறல்கள், விதி மீறல்கள் பற்றிய சில முறைப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.[

கடந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடத்தப்பட்டடது போலவே, பொதுத் தேர்தலும், நடத்தப்பட்டிருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்று தொடர்பான விவகாரங்களில் ஜனாதிபதியோ பிரதமரோ எந்த தலையீடும் செய்யவில்லை என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்திருந்தார்.

Image

இது இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

ஆனால் இது முழுமையான ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி உள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆட்சியிழந்து இருந்த காலத்தில்,  தமது ஆட்சியில் கிரமான முறையில் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதாக அடிக்கடி குறிப்பிடுவார்.

சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்தியதால், தனது ஆட்சி உச்சபட்ச ஜனநாயகத்தைக் கொண்டிருந்தது என்பது அவரது கருத்து.

ஆனால் மகிந்த ராஜபக்ச 2015இல் ஆட்சியிழந்த போது, அவரது அரசாங்கம் எதேச்சாதிகார ஆட்சி என்று சர்வதேச சமூகத்தினால் வர்ணிக்கப்பட்டது.

ஜனநாயக தேர்தல்களை நடத்தியதால் மட்டும், எதேச்சாதிகார அரசாங்கம் என்ற பெயரில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலை எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், நடத்த மகிந்த- கோத்தா சகோதரர்கள் முடிவு செய்தமைக்குக் காரணம், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தால், அது அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த ஆண்டு ஜனதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றி பெற்ற போதும், அந்த வெற்றியை வெளிப்படுத்திய விதம் மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு திருப்தியைக் கொடுத்திருக்கவில்லை.

தமது அரசாங்கத்தை வரவேற்கும் நிலையில், மேற்குலக சமூகம் இல்லை என்பது ராஜபக்ச அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெரியும்.

எனவே, பொதுத் தேர்தலில் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டாலோ, ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றாலோ அது அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்கும் என்பது, அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நகர்வுகளுக்கு காரணமாக அமையும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அதனால் தான், அரசாங்கம் இந்த தேர்தல் அதிகபட்ச அமைதியாக நடப்பதை உறுதி செய்தது. எந்த தலையீடுகளுக்கும் இடமளிக்கவில்லை.

பொதுவாகவே, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிற பகுதிகளில் தான் விதிமீறல்கள் அதிகம் நடப்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை அதிகளவு விதிமீறல்கள் வடக்கில் தான் பதிவாகின.

இதிலிருந்து அரசாங்கத் தரப்பு எந்தளவுக்கு பொறுமைகாக்க முயன்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுத் தேர்தலை அமைதியாகவும் நீதியாகவும் நடத்தியுள்ளதால், சர்வதேசம் இலங்கையைத் திரும்பிப் பார்த்து விடப் போகிறதா என்பதே இன்றுள்ள வினா.

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் உறவுகள் இந்தத் தருணத்தில் முக்கியமானவை.

ஏற்கனவே கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்,  சர்வதேச சமூகத்துடன் சரியான உறவுகளை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

U.S.-China Feud Over Coronavirus Erupts at World Health Assembly ...

நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்குக் கூட ஜனாதிபதியினால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. கொரோனா தொற்று எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரும் அதே நிலை நீடிக்கப் போகிறது. அதற்காக சர்வதேச உறவுகளை சீரமைத்துக் கொள்ளாமல், இருக்க முடியாது.

ஏனென்றால் இலங்கைக்கு பொருளாதார மீட்சி முக்கியமாகத் தேவைப்படுகிறது. மற்றெல்லாப் பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் கூட, பொருளாதார மீட்சி அவசியமானதாக இருக்கிறது,

இலங்கையின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது.

இதனை நிமிர்த்த வேண்டுமானால், அரசாங்கத்துக்கு கடன்களை விட, புதிய முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் அவசியம்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் புதிய முதலீடுகள், திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகளில் சர்வதேச சமூகத்துடன் எந்தளவுக்கு நெருங்கிச் செயற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாடு விடயத்தில் இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது, அந்த உடன்பாட்டை தொடர்வதா இல்லையா என்று அறிவிக்க அரசாங்கம் தயங்குகிறது.

அது ஏற்புடையது அல்ல, அதனால் நாட்டுக்கு இழப்பு என்றால், அதனை உடனடியாக அறிவித்து விட்டுப் போயிருக்கலாம்.

அதனையும் செய்யாமல், உடன்படவும் முடியாமல் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

இந்தச் சர்ச்சைக்கு ஏதோ ஒரு விதத்தில் முடிவு எட்டப்பட வேண்டும். அது நடந்தால் தான், அமெரிக்காவுடனான உறவுகளை சீர்படுத்துவதற்கான வழிமுறையை கண்டறிய முடியும்.

US Election 2020 key dates: All the most important dates YOU need ...

இதற்கிடையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

 அங்கு ஜனநாயக கட்சி அரசாங்கம் அமைந்தால், இலங்கை அரசாங்கத்தினால்,  எந்தளவுக்கு நெருங்கிச் செயற்பட முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.

ஏனென்றால், ஜனநாயக கட்சி நிர்வாகம்  தான் இலங்கை தொடர்பான பிரேரணைகளை ஐ.நா மனி உரிமைகள் பேரவையில் கொண்டு வந்தது.

அந்தப் பிரேரணைகளை நிறைவேற்றவதாக வாக்குறுதிகளைக் கொடுத்த இலங்கை அரசாங்கம் அதனை நீர்த்துப் போகச் செய்து, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய மூன்று விடயங்களையும் இப்போது கானல் நீராக மாற்றி விட்டிருக்கிறது,

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி வரும் நிலையில், அமெரிக்காவில் ஜனநாயக் கட்சி ஆட்சி மலருமானால் தற்போதைய அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி தோன்றக் கூடும்.

எனவே புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்காவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்வது என்பது உடனடிச் சாத்தியமான விடயமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையும் இது தான். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை முன்வைப்பதற்கு ஒத்துழைத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் அமைதி, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்காக, முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் மீதான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாமை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சினத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா விடயத்திலும் இலங்கை அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லை. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவின் பொறுமையை அதிகபட்சமாக சோதித்து வருகிறது இலங்கை அரசு.

கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுமையாக இந்தியாவுக்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி, பின்னர் பாதியில் பாதியாக குறைக்கப்பட்டது. இப்போது எதுவும் இல்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

ஏற்கனவே மத்தல விமான நிலைய விடயத்தில், இந்தியா ஏமாற்றம் அடைந்தது,  கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்திலும் அதே நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டால் புதுடெல்லியை வெறுப்படையச் செய்யும்.

இலங்கையின் நிதி நிலையை கொழும்பில் இலகு ரயில் திட்டத்துக்கு வழங்கவிருந்த நிதியை ஜப்பான் நிறுத்தியிருக்கிறது.

இவையெல்லாம் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் விளைவுகள்.

இந்த நிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும். மாற்றியமைப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்.

ஏனென்றால் வெளிநாட்டு நிதி முதலீடுகள், உதவிகள் என்பன இப்போது முக்கியமானவை.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான கொடுப்பனவை செலுத்தக் கூட திராணியற்ற அரசாக மாறியிருக்கிறது இலங்கை.

இந்த நிலையை சரிப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்துடனான நெருங்கிய ஊடாட்டம் அவசியம்.

அதனை தற்போதைய அரசாங்கத்தினால் எந்தளவுக்கு விரைவாகவும், உறுதியாகவும் முன்னெடுக்க முடியும் என்பது கேள்வியே.

ஏனென்றால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சர்வதேச அளவில் உள்ள நண்பர்களை விட, நண்பரல்லாதவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38