(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2875 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 4 இலங்கையர்களும் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கமையே தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் இது வரையில் 2622 பேர் குணமடைந்துள்ளதோடு 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் 49 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப்பின்னர் நேற்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் நால்வர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்தவர்கள் என்பதோடு ஏனைய 23 பேரும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்திலுள்ளோராவர்.

இவ்வாறு நாட்டில் தொற்றுக்குள்ளானவர்கள் தினமும் இனங்காணப்பட்டு வருவதால் பொது மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதோடு சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.