(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒன்பதாவது பாராளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டுத் திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றன. 20 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தின்போது உறுப்பினர்கள் எந்த ஆசனத்தில் அமரவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை என  பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார். 

எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டம் ஆரம்பிக்கும் நிலையில் உறுப்பினர்களுக்காக ஆசன ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

9 ஆவது பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. அன்றையதினம் பாராளுமன்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்கள் பக்கம் இருக்கும் ஆசனங்களில் அமர்ந்துகொள்வார்கள். பொதுவாக சிரேஷ்ட நிலையிலே அமர்ந்துகொள்வார்கள். அன்றைய தினம் யாருக்கும் ஆசனங்கள் ஒதுக்கி இருக்காது.

அன்றைய தினத்துக்கு பின்னர் உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படும். எதிர்க்கட்சி வரிசையில் எதிர்கட்சிகளின் தலைவர்கள் முன் வரிசையில் அமர்த்தப்படுவார்கள். ஆசனங்களை ஒதுக்கும் இறுதித் தீர்மானத்தை சபாநாயகர் மேற்கொள்வார். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் இடம்பெற இருப்பதால்  ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் உட்கார வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் அலுவலக உபகரணங்களையும் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்திக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் வழிமுறையினை பாராளுமன்ற செயலாளர் காரியாலயம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பத்தை பூரணப்படுத்த முடியும். அத்துடன் விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கொவிட்-19 எச்சரிக்கை காரணமாக ஒன்லைன் மூலம் தகவல்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.