சண் பற்றி சில குறிப்புகள் - தனிச்சிறப்புமிக்க ஒரு ஆளுமை

11 Aug, 2020 | 05:20 PM
image

மனிக் டி சில்வா

என்.சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டு முன்னிட்டு அண்மையில் கலாநிதி தயான் ஜயதிலக எழுதிய கட்டுரை சண்ணுடனான எனது சொந்த ஊடாட்டங்கள் பற்றிய தனிப்ப்டட நிகழ்வின் குறிப்புக்களை எழுதுவதற்கு என்னை உந்துகிறது. அவை குறைந்தபட்சம் கடந்துபோன ஒரு யுகத்தின் நினைவுகளுடன் வாழும் பழைய தலைமுறையைச் சேர்ந்த வாசகர்களுக்காவது சுவாரஸ்யமாக இருக்கக்கூடும் என்று நம்புகின்றேன்.

ஜயதிலக நினைவு மீட்டியதைப் போன்று அவரது தந்தையாரான பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வாவே சண்ணுக்கு (நகைச்சுவையாக) மாவோ சே - சண்" என்று பெயர் சூட்டினார். சீனப்பாணி கம்யூனிஸம் மீதான சண்ணின் பற்றுறுதி முற்றுமுழுதானது என்பதுடன், அவர் வாழ்வின் இறுதிவரை அவ்வாறே தொடர்ந்து நிலைத்தது.

தலைவர் மாவோவுடன் நெருக்கமாகக் கலந்துரையாடி சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்டமான அணிவகுப்பொன்றின் போது அவருக்கு அருகாக நின்ற எமது பிராந்தியத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பெரும்பாலும் சண்ணாகத் தான் இருக்கமுடியும். நக்சலைட்டுக்கள் என்று நன்கு அறியப்பட்ட இந்தியாவின் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தாபகத்தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்திக்கவில்லை என்று ஜயதிலக கூறுகின்றார். கலாசாரப்புரட்சியின் உச்சகட்டத்தின் போது தியனென்மென் சதுக்கத்தில் 15 இலட்சம் செங்காவலர்களின் அணிவகுப்பொன்றைத் தலைவர் மாவோ பார்வையிட்டபோது சண் அவருக்கு அருகில் நின்றார்.

1971 கிளர்ச்சியைத் தொடர்ந்து சண் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருடன் சேர்த்து அடைக்கப்பட்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனவின் உறுப்பினர்கள் தன்னை 'பால்திகாரயா" என்று பட்டப்பெயர் கொண்டு அழைத்ததாக சண் எனக்குக் கூறியதாக ஞாபகம். சண்ணுக்கு இருந்த ஒஸ்டியோ - ஆர்தரைட்டிஸ் என்ற எலும்பு வருத்தம் காரணமாக அவரால் குந்தியிருக்க இயலாமல் இருந்தது. அதனால் சிறைச்சாலை அதிகாரிகள் அவர் கொமோட் ஒன்றை (விசையுடன் நீர் பாய்ச்சும் வசதியற்ற) பயன்படுத்துவதற்கு அனுமதித்தார்கள். இயற்கைக்கடனைக் கழித்துவிட்டு சண்ணே அதைத் துப்பரவும் செய்யவேண்டியிருந்தது. அதனால்தான் அந்த 'பால்திகாரயா" பட்டப்பெயர் வைக்கப்பட்டது.

மாக்சிஸ - லெனினிஸ படிப்பின் பல்கலைக்கழகத்தின் 'தாபகராகவும்" 'உபவேந்தராகவும்" சண்ணை நோக்கலாம். தெற்கையும் வடக்கையும் சேர்ந்த ஒரு கோட்பாட்டு உறுதிமிக்க ஒவ்வொரு இலங்கைப் புரட்சிவாதியும் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பட்டம்பெற்ற போதிலும் அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்கவில்லை என்று மிகுந்த அறிவுச்செறிவுடன் ஜயதிலக கூறியிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுன ஒரு மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல என்றபோதிலும் அது மாவோயிஸ்ட் இயக்கத்தின் மடியிலிருந்தே தோன்றியது. அதன் முன்னணி உறுப்பினர்கள் பெரும்பாலும் முன்னாள் மாவோவாதிகளே என்று ஜயதிலக குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியானதே.

அத்தகைய ஒருவரே ரோஹன விஜேவீர. முன்னர் கடற்படையினர் விடுதியாக இருந்த ஒரு பழைய கோட்டைக் கட்டடம் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகளுக்காக ஒரு நீதிமன்றமாகப் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது. அங்கு விசாரணைகளுக்கு அழைத்துவரப்பட்ட ரோஹன விஜேவீர மாவோ பட்டியொன்றைத் தனது நீலநிற மேலங்கியில் அணிந்திருந்ததை நான் கண்டேன். பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்னாண்டோ தலைமையிலான அந்தக் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு 1971 கிளர்ச்சியின் தலைவர்களை விசாரணை செய்தது. ஆனால் சண் அந்த நேரத்தில் சிறையில் அடைக்கப்படிருந்த போதிலும் அந்த விசாரணைகளில் ஒரு குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு வந்த விஜேவீர என்னிடம் 'யாருக்காக நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு நிருபராக அந்த நேரத்தில் இருந்தபோதிலும், அமெரிக்கச் செய்தி நிறுவனமான அசோஸியேடட் பிரஸ் (ஏ.பி) நிறுவனத்தில் நான் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். விஜேவீரவின் கேள்விக்கு நான் 'ஏ.பி" என்று பதிலளித்தேன். அவர் அந்த நிறுவனத்தை அறிந்திருந்தார் என்று நான் நினைக்கவில்லை என்றாலும் 'ஓஹோ, ஏ.பி" என்று அவர் திருப்பிச்சொன்னார். அந்த நேரத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் மாத்திரமே பெரும்பாலான இலங்கையர்கள் பரீட்சயமுடையவர்களாக இருந்தனர்.

1960 களில் சண்ணின் கட்சியின் யாழ்ப்பாணக்கிளை வன்முறை வெகுஜனப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்துக்கொண்டிருந்தது. சாதி வேறுபாடு காரணமாக சங்கானையில் இடம்பெற்ற ஒரு கொலை பற்றித் தமிழரசுக்கட்சி எம்.பியான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, 'சண் தலையிட்ட பிறகே சாதி வேறுபாடுகள் படிப்படியாகத் தீவிரமடைந்தன" என்று குறிப்பிட்டார். ஒப்சேவர் பத்திரிகையில் எனது ஆசிரியர் டென்சில் பீரிஸ் என்னை அழைத்து அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கூறியதற்கு சண்ணின் எதிர்வினை என்னவென்று கேட்டறியுமாறு கூறினார். சண்ணிடம் தொடர்புகொண்டு நான் கேட்டபோது 'எங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கு எதிர்ப்பு வெளிக்கிளம்பும்" என்று மாவோவின் மேற்கோளொன்றைக்கூறி மணிச்சுருக்கமாக அவர் பதில் கூறியது இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்டல் பற்றி பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றுக்குப் பதிலளித்த அன்றைய தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சர் மேஜர் மொண்டேகு ஜெயவிக்ரம கூறியது எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. தொலைபேசிய ஒட்டுக்கேட்டல் சட்டரீதியாக அந்த நேரத்தில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மகாதேசாதிபதியின் அனுமதியுடன் மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும். மேஜர் ஜெயவிக்ரம தனது பதிலில், இரண்டு தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. அவற்றில் ஒன்று சண்ணுடையது என்று குறிப்பிட்டார். மற்றைய தொலைபேசி யாருடையது என்று அவர் கூறியிருந்தாலும் அந்தப் பெயரை என்னால் இப்பொழுது ஞாபகப்படுத்த முடியவில்லை.

சண் ஒரு ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர். இறுதிக்காலங்களில் அவரது கட்சி அறிக்கைகளில் மாத்திரமே நிலைத்திருந்தது. ஒப்சேவர் பத்திரிகையில் அவரது பெருவாரியான அறிக்கைகள் பிரசுரமாகின. பிறகு லங்கா கார்டியன் சஞ்சிகையிலும் அவரது கட்டுரைகள் அடிக்கடி பிரசுரிக்கப்பட்டன. சண் ஒரு நூலை எழுதினார். அதை அவரது சொந்த செலவில்தான் வெளியிட்டார் என்று நம்புகிறேன். சிறையிலிருந்து சண் விடுதலை செய்யப்பட்டதும் அவரைப் பார்ப்பதற்கு கொள்ளுப்பிட்டி ஸ்கொபில்ட் பிளேஸ் இல்லத்திற்கு நான் சென்றபோது அந்த நூலின் பிரதியொன்றை அவர் எனக்குத் தந்தார். அவரது மகள் (உண்மையில் அந்த மகள் அவரது இரண்டாவது மனைவியான - முன்னாள் பருத்தித்துறைத் தொகுதி எம்.பியான பொன்.கந்தையாவின் மனைவியின் மகள்) இந்த நூலைப் பரிசாகக் கொடுப்பது எமக்குக் கட்டுப்படியாகுமா என்று கேட்டது எனக்கு நல்ல ஞாபகம்.

எமது சண்டே ஐலண்ட் பத்திரிகையில் அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கும் கமார் டேவிட் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பத்தியில் வடக்கில் 70 வருடகாலத்தில் இடதுசாரிக்கட்சியொன்றின் வேட்பாளராகப் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஒரேயொரு தமிழ் இடதுசாரி அரசியல்வாதி பொன்.கந்தையாவே என்று குறிப்பிட்டிருந்தார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல் என்பது கவனிக்கத்தக்கது.

மாஸ்கோ - பீகிங் தத்துவார்த்த வேறுபாடுகள் காரணமாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (Ceylon Communist Party) அதன் பெயரையும் அந்த நாட்களில் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தையும் தன்னுடன் கொண்டுசென்றார். மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்டுகள் தங்களை“Communist Party of Ceylon" என்று அழைத்துக்கொண்டார்கள். காலனித்துவ நாட்களில் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவரான சண் தான் அங்கு சந்தித்த சீதா விக்ரமசூரிய என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார்.

அந்த நாட்களில் சண்ணும் பாலா தம்புவும் தொழில் நீதிமன்றங்களின் முன்பாக தொழிலாளர் வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லமை வாய்ந்த நியாயவாதிகளாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்னுடன் ஒப்சேவர் பத்திரிகையில் பணியாற்றிய சகாவான எரிக் ரணவக்க முதலாளிமார் சம்மேளனத்தில் இணைந்துகொள்வதற்காக லேக்ஹவுஸிலிருந்து விலகிச்சென்றார். தொழிற்சங்கங்களுக்கும் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் போது ஒரு இலங்கையன் என்ற வகையில் தான் பெருமிதம் கொள்வதாக என்னிடம் அவர் கூறினார். அதற்குக் காரணம் பிரிட்டிஷ் வர்த்தகத் தலைவர்களுடன் அந்த நாட்களில் பாலாதம்பு வாதாடியபோது காட்டிய திறமையே ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கட்டுரையில் தயான் ஜயதிலக அதைக் கூறாவிட்டாலும் கூட அவர் இந்தியாவிற்குத் தப்பிச்செல்வதற்கு முன்பாக இலங்கையில் தலைமறைவாக இருந்த நாட்களில் சண் தனது வீட்டில் அவரை மறைத்து வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

சண்ணைப் பற்றிய ஒரு இறுதி நினைவுக்குறிப்பைக் கூறுவதன் மூலம் இந்தக் கட்டுரையை முடிவுசெய்ய விரும்புகின்றேன். சண் தனது நூலை தனது பேரனான சத்தியனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தச் சிறுவன் சண்ணின் முழுமையான செல்வாக்கிற்கு உட்பட்டவனாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதைப் பற்றி நினைப்பதையே சண் தீவிரமாக வெறுத்தார். ஆனால் அந்த வளர்ப்பு மகனின் வற்புறுத்தலின் காரணமாக இறுதியில் குடும்பத்துடன் இணைந்துகொள்வதற்காக என்று இங்கிலாந்திற்குப் போகவேண்டிய ஏற்பட்டுவிட்டதாக நம்புகின்றேன். கொழும்பில் அவர் தனது வீட்டில் ஒரு பணிப்பெண்ணின் பராமரிப்பிலேயே வாழ்ந்துவந்த சூழ்நிலையைக் கருத்திலெடுத்து நோக்கும் போது (அந்தப் பெண்மணி சண்ணை மிகுந்த சிரத்தையுடன் கவனித்து வந்தார்) இங்கிலாந்துக்கு அவர் செல்வதற்கு எடுத்த முடிவு அவரைப் பொறுத்தவரை நல்லதே. வெளிநாட்டில் 8 பெப்ரவரி 1993 தனது 74 ஆவது வயதில் அவர் காலமானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38