(நா.தனுஜா)

அம்பாந்தோட்டையில் 'சைனா' என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையை அடுத்து, அது குறித்து சீனத்தூதரகம் விளக்கமளித்திருக்கிறது.

அம்பாந்தோட்டையில்  அடுத்தடுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சீனாவின் ஆங்கிலப் பதமான CHINA  என்ற சொல்லை வெளிப்படுத்தும் வகையில் அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கும் கூகுள் வரைபட புகைப்படங்கள் நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது. அதற்கு சமாந்தரமாக SW என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் அமைந்த கட்டடங்களின் கூகுல் வரைபட புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு விளக்கமளித்திருக்கின்றது:

'இவ்வரைபடத்தில் காண்பிக்கப்படும் கட்டடங்கள் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் போது CHINA - SLK என்ற எழுத்துக்களைக் வெளிப்படுத்தும் விதமாக சைனா ஹார்பர் என்ஜினீரிங் கம்பனியினால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. எனினும் பின்னர் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழும கம்பனி மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் கம்பனி என்பன அப்பகுதிக்குள் பிரவேசித்ததுடன், வேகமாக அதிகரித்து வந்த துறைமுக வாணிபத்தின் விளைவாக அப்பகுதியை விரிவாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகையினாலேயே SLK என்பதிலுள்ள LK இன் வடிவம் திரிபடைந்திருக்கிறது. இது அபிவிருத்தி மற்றும் அன்பின் கதையாகும்' என்று சீனத்தூதரகம் குறிப்பிட்டிருக்கிறது.

இப்பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்ற இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மகினொன், 'அவ்வாறெனில் புதிய கனேடியத் தூதரகமொன்றை பொறியியலாளர்கள் வடிவமைக்கும் போது அது இலங்கைக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் கற்பனை ஓட்டத்திற்கேற்றவாறு கட்டடத்தை நிர்மாணிக்குமாறு நானும் கூறவேண்டும் என்று நினைக்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.