(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், உணவல்லாப் பொருட்களின் விலையதிகரிப்பின் காரணமாக கடந்த ஜுன் மாதம் 3.9 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஜுலை மாதத்தில் 4.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் வருடாந்த மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப்பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் காணப்பட்ட 3.9 சதவீதத்திலிருந்து ஜுலை மாதம் 4.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு உணவல்லாப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

உணவுப்பணவீக்கத்தைப் பொறுத்தவரை, அது ஜுன் மாதம் 10 சதவீதமாகக் காணப்பட்டிருப்பதுடன் ஜுலை மாதம் 10.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோன்று உணவல்லாப் பணவீக்கம் ஜுன் மாதத்தில் 1.4 சதவீதமாகப் பதிவாகியிருப்பதுடன் அது ஜுலை மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இவற்றின் காரணமாக ஜுன் மாதத்தை விடவும் ஜுலை மாதத்தில் பணவீக்கத்தில் அதிகரிப்பொன்று ஏற்பட்டிருக்கின்றது.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாற்றத்தினால் மே மாதத்தில் 5.2 சதவீதமாகக் காணப்பட்ட முதன்மைப்பணவீக்கம் ஜுன் மாதம் 6.3 சதவீதமாக அதிகரித்திருந்ததுடன், இது உணவுப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.