மூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு

By T Yuwaraj

11 Aug, 2020 | 12:16 PM
image

தமிழ் திரையுலகில் மூத்த பாடலாசிரியரான முத்துச்சாமி உடல் நலகுறைவின் காரணமாக இன்று தமிழக நகரான நாமக்கல்லில் உயிரிழந்தார்.

1958 ஆம் ஆண்டில் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற பாடலை முத்துசாமி எழுதியிருக்கிறார். 

இந்த பாடல் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பாடலாகும். இதைத் தொடர்ந்து `காவிரியின் கணவன்’ என்ற படத்தில் `சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து’ என்ற பாடலலையும், `பொன்னித் திருநாள்’ படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து’ என பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார் பாடலாசிரியர் முத்துச்சாமி, 

பொதுவெளியில் ஊடக வெளிச்சமில்லாமல் அமைதியாக தன்னுடைய பிறந்த ஊரான நாமக்கல் அருகேயுள்ள ஆர். புதுப்பட்டியில் வாழ்ந்து வந்தார்.  97 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். 

‘வெண்பா கவிஞர்‘ என்று புகழப்படும் இவர்,  பாடாசலையிலிருந்து இடைநிறுத்தம் செய்தவர். இவர் அறுபதிற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.  பாடல் எழுதுவதுடன் ‘மருத நாட்டு இளவரசி‘ என்ற படத்தின் கதை உள்ளிட்ட ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார். 

இவ்விவகாரம் தொடர்பாக இவருக்கும், கலைஞர் மு கருணாநிதிக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அதிமுகவில் இணைந்தார். 

அத்துடன் வயதான காலத்தில் இவருக்கு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார். தொடர்ந்து அரசின் சார்பில் நிதி உதவி கிடைக்க ஏற்பாடும் செய்திருக்கிறார்.

மண்ணுக்கு மரம் பாரமா? என கேட்டவர், ரசிகர்களின் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டு,மீளாத்துயிலில் இறைவனடி சேர்ந்திருக்கிறார். அவருக்கு திரையுலகினரும், திரையிசையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right