பீஜிங் விதித்த புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜிம்மி லாய் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கின் அப்பிள் டெய்லி பத்திரிகை பதிலளித்துள்ளது.

அதன்படி ஹொங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய்யின் புகைப்படம் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டு, 'போராடுவோம்' என்று தலைப்பும் இடப்பட்டுள்ளது.

ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லியின் நகல்களைப் பெற வாசகர்கள் அதிகாலையில் இருந்து வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். 

வழக்கமாக 100,000 பிரதிகளை அப்பிள் டெய்லி அச்சிடப்படுகின்றபோதிலும், இந்த சம்பவத்திற்காகாக 500,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, அதில் பங்கெடுத்த செயல்பாட்டாளர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஜிம்மி லாய் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்ட மிக உயர்ந்த கைது இதுவாகும்.

71 வயதாகும் ஜிம்மி லாய், பிரிட்டிஷ் கடவுச்சீட்டும் வைத்துள்ளார். அவர் மீது சட்டவிரோதமாக கூடியது, போராட்டத்தில் ஈடுபட தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதுமாத்திரமின்றி ஹொங்கெங்கில் ஜிம்மி லாய் நடத்தி வரும் ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழ் அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஜிம்மி லாய்க்கு கைவிலங்கு பூட்டி காவல்துறையினர் அழைத்துச் சென்றார்கள். 

அவரது பெயரைக் குறிப்பிடாமல் ஹொங்கொங் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

39 முதல் 72 வயதுடைய ஏழு பேர் அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கைக்கு ஜிம்மி லாய் மட்டுமின்றி அவரது இரு மகன்கள், நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற இணைய இதழின் இரு தலைமை நிர்வாகிகளும் உள்ளாகியுள்ளனர்.