லெபனான் வெடிவிபத்தும்  அலிபாபா குகையும்

Published By: Priyatharshan

11 Aug, 2020 | 05:11 PM
image

லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்தைத் தொடர்ந்து நேற்று அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் பெய்ரூட் நகரம் பற்றி எரிந்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 தொன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4 ஆம் திகதி வெடித்து சிதறியது தெரிந்தது.

இந்த பயங்கர வெடி விபத்து பெய்ரூட் நகரை தலைகீழாக புரட்டிப் போட்டது மட்டுமன்றி உலகையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதேவேளை சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் லெபனான் அரசு பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியாது திணறுகின்றது. 

இதேவேளை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த விபத்து நடந்த துறைமுகம் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு  கட்டுப்படாத பகுதி என கூறப்படுகிறது.

 ஊழல் தலைவிரித்தாடும் இந்த துறைமுகம் லெபனானின் அலிபாபா குகை என்று அழைக்கப்படுகின்றது . கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்தே துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் இருந்து வந்துள்ளது .

இதனை அடுத்து அது ஆபத்தானது அகற்றப்பட வேண்டும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்படும் அதிகாரிகளினால் கண்டுகொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

 மேலும் இதன் பின்னணியை ஆராய்ந்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில்  இருந்து மொசாம்பிக் நாட்டிற்கு கப்பல் மூலமாக அமோனியம் நைட்ரேட் கொண்டு வரப்பட்டுள்ளது. 

கப்பலில் பழுது ஏற்பட்டதால் பெய்ரூட் துறைமுகத்தில் அனுமதி பெற்று நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த இந்தக் கப்பலின் உரிமையாளர் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கிய தால் உடனடியாக  சீர்செய்ய முடியவில்லை என்றும் அவரால் துறைமுக கட்டணத்தையும் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர் கப்பலை கைவிட்டதை அடுத்து கப்பலில் இருந்த அம்மோனியம் நைட்ரேட் அரசுடமை ஆக்கப்பட்டது. 

இவ்வாறு களஞ்சியபடுத்தப்பட்டிருந்ததே கடந்த 4 ஆம் திகதி வெடித்தது. அம்மோனியம் நைட்ரேட் உரம் மற்றும் வெடிமருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அணு ஆலை வெடிப்பு , இரசாயன பதார்த்தங்கள் வெளியேற்றம் ,விஷவாயு கசிவு போன்ற சம்பவங்கள் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும்இடம்பெற்றுள்ளன .

இலங்கை கூட இதற்கு விதிவிலக்கல்ல இலங்கையில் சாலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ களஞ்சியசாலை ஒன்றில்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர நேரிட்டது .

வெடிமருந்துகளை களஞ்சியப்படுத்தும்போது பொதுமக்கள் சனசந்தடி அற்ற பிரதேசங்களில் களஞ்சியப்படுத்துவது அவசியமாகும். இதன் காரணமாகவே மக்கள் நெருக்கமாக வாழும் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமையக்கூடாது என மக்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர். எனினும் இதனை உலகில் பல்வேறு நாடுகளும் கவனத்தில் கொள்ளாது இருப்பது கவலைக்குரியது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right