இந்தியாவின் முன்னணிப் பத்திரிகைகள் இலங்கைத் தேர்தல் முடிவுகளை எவ்வாறு பார்க்கின்றன?

10 Aug, 2020 | 09:43 PM
image

கடந்த வாரம் நடந்துமுடிந்த இலங்கையின் பாராளுமன்றத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமோக வெற்றி குறித்து இந்தியாவின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகைகள் வெவ்வேறு கோணங்களில் அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒருசில தினங்களில் அவை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கங்களில் ராஜபக்ஷாக்களின் வெற்றி தவிர்க்க முடியாதது, ஆனால் அதன் தாக்கம் கவலைக்குரியதாக இருக்கும் என்றும் இலங்கையின் புதிய அரசாங்கம் இனக்குழுமப் பெரும்பான்மைவாதத்தை முக்கியத்துவப்படுத்தி டில்லிக்கு எதிரிடையான சக்தியான பெய்ஜிங்கைப் பயன்படுத்தும் என்றும் பொதுஜன பெரமுன பெற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி இலங்கை மீதான ராஜபக்ஷ குடும்பத்தின் பிடியைக் கெட்டியாக்கியிருக்கிறது என்றும் அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கின்றன. 

'த இந்து" பத்திரிகை தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தின் (8 ஆகஸ்ட் 2020) விபரம் வருமாறு: 

இலங்கைப் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ராஜபக்ஷாக்கள் ஆட்சியதிகாரத்தின் மீதான தங்களது பிடியை வலுப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற மைல்கல்லை அநேகமாக எட்டுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நான்கு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதுடன், அதன் சிறுபான்மை நேசஅணிகளின் உதவியுடன் 225 ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும். 

பொதுஜன பெரமுனவிடம் இப்போது அரசியலமைப்பைத் திருத்துவதற்குப் போதுமான பலம் இருக்கிறது. அந்தப் பலத்தைப் பயன்படுத்தி முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் மீது விதிக்கப்பட்ட இரண்டு பதவிக்கால மட்டுப்பாடு மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். 

இந்தப் பிரம்மாண்டமான வெற்றியின் பின்னாலுள்ள காரணங்கள் பொதுஜன பெரமுனவின் துருப்புச்சீட்டான இனக்குழுமத் தேசியவாதம் எதிரணிக்கட்சிகளுக்கு இடையில் இருக்கக்கூடிய முன்னென்றும் இல்லாத குழப்ப அலங்கோலத்தினால் இன்னமும் மேலோங்கச்செய்யப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடன் நிவாரணத்தை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து நல்லாட்சி முறையைக் கொண்டுவருவதாக உறுதியளித்து 2015 இல் ஒன்றுசேர்ந்த மைத்திரிபால சிறிசேனவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான 4 வருட ஆட்சியின் தவறுகளை மறந்துவிடவில்லை என்றே தெரிகிறது. 

அந்த அரசாங்கம் இடையறாத உட்குழப்பங்களும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் நிறைந்ததாக இருந்ததுடன் பலவீனப்பட்டுக்கிடந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தவறியது. 250 இற்கும் அதிகமான மக்களைப் பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே புலனாய்வுத்தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் உகந்த நடவடிக்கை எடுப்பதில் அந்த அரசுக்கு இருந்த இயலாமை அதன் தோல்விகள் எல்லாவற்றிலும் உச்சமாக அமைந்தது. 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரியதொரு பிளவு ஏற்பட்டது. சஜித் பிரேமதாஸ தலைமையின் கீழ் ஒரு பெரும் பிரிவினர் பிரிந்துசென்றனர். அதனால் அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான விக்கிரமசிங்க ஒரு பலவீனமான தேர்தல் சமரையே நடத்தவேண்டிய நிலையிலிருந்தார். இறுதியில் படுதோல்வியையே சந்தித்தார். அவர் தனது சொந்த ஆசனத்தைக்கூடத் தக்கவைத்துக்கொள்ளத் தவறிவிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. 

இதன் விளைவாக இலங்கை ஒரு விசித்திரமான பாராளுமன்றத்தைக் காணப்போகிறது. அதாவது சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இரு பிரதான கட்சிகளாக விளங்கிவந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பாராளுமன்றத்தில் பிரசன்னம் இல்லையென்று தான் சொல்லவேண்டும். சுதந்திரக்கட்சியின் சார்பில் தெரிவான ஒரேயொரு வேட்பாளரும் கூட யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட தமிழராவார். 

ஒரு பயனுறுதியுடைய பொதுச்சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கையினால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. அது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்குப் பெரிதும் அனுகூலமாக அமைந்த மற்றுமொரு விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி சிறிசேன பொதுஜன முன்னணி வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் தனது ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. வழமையாகக் கடுமையான தேசியவாத நிலைப்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்கும் வழக்கத்தைக்கொண்ட தமிழ் சிறுபான்மையின மக்கள் சில யதார்த்தங்களை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் போல தெரிகிறது. அவர்கள் பல வருடங்களாகத் தங்களது பிரதான அரசியல் பிரதிநிதிகளாக விளங்கிவந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை. பதிலாக மாற்றுத் தமிழ்க்கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு தெளிவான பின்னடைவாகும்.

நழுவிச்சென்று கொண்டிருக்கும் அரசியல் தீர்வுகுறித்து தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதிலும் பார்க்கப் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது குறித்து தமிழர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆதரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக அமையலாம். இப்பொழுது கூடுதலான அதிகாரக்கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஆளும் பொதுஜன பெரமுன 19 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தின் மூலமாகப் பெறக்கூடியதாக இருந்த பலாபலன்களை இல்லாமல் செய்வதில் நாட்டம் காட்டுவதற்குப் பதிலாக மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை நிறைவுசெய்வதை நோக்கிப் பாடுபடவேண்டும். புதிய அரசாங்கம் ஊடுருவிவரும் இராணுவவாதம் பற்றி இருக்கின்ற விசனத்தைக் கவனத்திலெடுக்க வேண்டும். அத்துடன் 2015 இல் நாடு இல்லாமல்செய்ய முனைந்த ஜனநாயகப்பற்றாக்குறை யுகமொன்றுக்கு மீண்டும் செல்லாதிருப்பதை உறுதி செய்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். 

இந்துஸ்தான் டைமஸ் பத்திரிகை 'இலங்கையில் அதிகாரத்தை வலுப்படுத்தியிருக்கும் ராஜபக்ஷாக்கள்" என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் (10 ஆகஸ்ட் 2020) கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பாராளுமன்றத் தேர்தல்களின் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றெடுத்திருக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையின் அரசியல் சமுதாயத்தின் மீதான தங்களது கட்டுப்பாட்டை இறுக்கமடையச் செய்திருக்கிறார்கள். ஜனாதிபதி என்றவகையில் கோத்தபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை உறுதியாகப் பலப்படுத்தியிருக்கிறார். பாராளுமன்றத்தேர்தல் வெற்றி இப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்டு வந்திருக்கிறது. 

கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலிலும் இப்போதைய பாராளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷாக்கள் பெற்ற வெற்றி ஒன்றும் அதிர்ச்சிக்குரியதல்ல. முன்னைய அரசாங்கத்தின் உட்சண்டைகளும் இயலாமைகளும் இலங்கைப் பிரஜைகளைச் சலிப்படைய வைத்துவிட்டன. ஆழமான சிங்களப் பெரும்பான்மையினக் குழுமவாத உணர்வும் நாட்டில் பரந்திருக்கிறது. தமிழ்ப்புலிகளைத் தோற்கடித்த பிறகு பிரத்யேகமான சிங்கள அரசொன்றை உருவாக்குவது குறித்து ராஜபக்ஷாக்கள் அளித்த வாக்குறுதியின் விளைவாக இது ஏற்பட்டது. அத்துடன் ஏனைய கட்சிகள், தலைமைத்துவம், கோட்பாடுகள் மற்றும் கட்சி ஒழுங்கமைப்புக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நேர்ததில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கமாக ராஜபக்ஷாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விளங்குகிறது.

ஆனால் அவர்களின் வெற்றி ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல என்கின்ற அதேவேளை, அதன் விளைவுகள் - இலங்கைக்கும் இந்தியாவிற்கும் கவலையைத் தருவதாக இருக்கின்றன. பிரம்மாண்டமான பாராளுமன்றப் பலத்தைப் பயன்படுத்தி ராஜபக்ஷாக்கள் மீண்டும் ஒரு தடவை அதிகாரங்களை மத்தியமயப்படுத்துவதற்கும் நிறுவன ரீதியான கட்டுப்பாடுகளை மிதித்துத்தள்ளுவதற்கும் ஜனநாயக சுதந்திரங்களை இல்லாமல் செய்வதற்கும் முயற்சிக்கக்கூடிய சாத்தியப்பாடு இருக்கிறது. 

இனங்களுக்கு இடையில் பாகுபாடுகளைக் காட்டுகின்ற அவர்களது அணுகுமுறையை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது நல்லிணக்கம், நீதி மற்றும் சிறுபான்மையினத்தவருக்கான அதிகாரப்பரவலாக்கல் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்கள் மங்கலானவையாகவே தொடர்ந்தும் இருக்கும். சீனா தொடர்பில் இந்தியர்கள் முன்நிலையில் பொருத்தமான முறையில் பேசவேண்டும் என்பதில் ராஜபக்ஷாக்கள் கூடுதல் நிதானமாக இருக்கக்கூடும் என்கிற அதேவேளை, பெய்ஜிங்குடனான அவர்களின் ஊடாட்டமும் தோழமையும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம். இந்தியா இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் கூடுதலானளவு உறுதியான முறையிலும் இராஜதந்திர முறையிலும் நடந்துகொண்டு தனது அக்கறைகளை அழுத்தியுரைக்க வேண்டும். 

டைமஸ் ஒப் இந்தியா 'பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் (8 ஆகஸ்ட் 2020) கூறியிருப்பதாவது:

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2018 பெப்ரவரி உள்ளுராட்சித்தேர்தல்களில் அமோக வெற்றிபெற்ற நாளிலிருந்தே இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது முன்கூட்டியே கூறப்பட்டு வந்திருக்கிறது. எதேச்சதிகார ராஜபக்ஷ் ஆட்சியைத் தூக்கியெறிவதற்குத் தீர்மானித்து 2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த மக்கள் அவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான செயலிழந்த உறவுமுறையினால் சலிப்படைந்து போயிருந்தார்கள். 

பிரதமர் என்ற வகையில் தனது பதவிக்காலத்தின் ஆரம்பகட்டங்களில் விக்கிரமசிங்க தனது ஊழல்கார நண்பர்களைப் பாதுகாப்பவராகத் தெரிந்தார். ராஜபக்ஷாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடும் என்று பயந்து நடுங்கிய சிறிசேன தனது பிரதமருடன் தொடர்புகொள்வதை நிறுத்திக்கொண்டார். ஆனால் இந்தியாவிடமிருந்து உடனுக்குடன் நம்பகமான புலனாய்வுத்தகவல்கள் கிடைத்த் போதிலும்கூட 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் அனர்த்தத்தைத் தடுக்கத்தவறிய சிறிசேனவினதும் விக்கிரமசிங்கவினதும் செயல் அவர்களது அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் உச்சநிலைக்குக் கொண்டுசென்றது. 

பொதுஜன பெரமுனவிற்குக் கிடைத்த கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி இலங்கை மீதான ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரப்பிடியை மீண்டும் கெட்டியாக்கியிருக்கின்ற அதேவேளை, கடந்த நூற்றாண்டு பூராகவும் இலங்கையின் விதியைத் தீர்மானித்த இரண்டு வம்சங்களின் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவற்றின் இறுதிமூச்சை விட்டுவிடக்கூடும். கொழும்பின் பழைய அதிகார வர்க்கங்கள் புதைக்கப்பட்டுவிட்டன என்றுதான் கூறவேண்டும். முன்னாள் ஜனாதிபதிய ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவின் வடிவில் புதிய கொழும்பு மேல்நிலை வம்சமொன்று தோன்றியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் மீதான 2009 இராணுவ வெற்றியின் சிற்பி என்றவகையில் தனது புகழைச் சுற்றிக் கட்டியெழுப்பிய கொழும்பு பெரும்பான்மைவாத சிங்கள பௌத்தத் தளத்தின் அமோக ஆதரவுடன் கடந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அண்மைக்கால அரசியல்வாதி. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அவர் பிரதமரை விடவும் கூடுதல் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார். ஆனால் கோத்தபாயவின் வெற்றியையடுத்து உடனடியாகவே கடந்த வருடம் விக்கிரமசிங்க பதவி விலகியிதிலிருந்து பிரதமராக இருந்துவரும் மக்கள் வசீகரம் மிக்க அவரின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ சுமார் 50 வருடகாலமாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றார். 

மஹிந்தவைப் பொறுத்தவரை அவரது மக்கள் செல்வாக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இடையில் ஓய்வு பெறப்போகின்ற ஒரு இரண்டாம்நிலைத் தலைவராக இருக்கப்போவதில்லை. மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வரும் அபிலாஷையை மஹிந்த தொடர்ச்சியாக வளர்த்துக்கொண்டு வருகிறார். சகோதரர் விரும்புவாரேயானால், 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தற்போது கிடைத்திருக்கும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்திக் கடந்த அரசாங்கத்தின் மிகப்பெரியதென்று கூறப்படும் சாதனையை - ஜனாதிபதியின் இரு பதவிக்கால மட்டுப்பாட்டை மீளவும் கொண்டுவந்ததுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச்செய்த அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்து மஹிந்தவிற்கு உதவமுடியும். 

கோத்தபாய - மஹிந்த அரசாங்கம் அதன் பெரும்பான்மைவாதத்தை வெளிப்படையாகவே ஏற்கனவே காண்பித்து வந்திருக்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழுவொன்றினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து வெளிக்காட்டப்பட்ட வீரதீரமிக்க சிங்கள பௌத்தவாதத்தினால் தமிழர் பிரச்சினை ஒளிமறைப்புச் செய்யப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அது இன்னும் குணப்படுத்தாத புரையோடிப்போன புண்ணாகவே தொடர்கிறது.

தமிழ் சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் வற்புறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்திலிருந்து இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை விலகிக்கொண்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் சுருங்கிபோய்விட்டது. உள்நாட்டுப்போரின் முடிவிற்குப் பிறகு தமிழ் பகுதிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைப் பரவலாக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோள்களுக்கு மஹிந்த செவிமடுக்கவில்லை. இப்பொழுது ராஜபக்ஷ சகோதரர்கள் அதில் முன்னரையும் விடக் குறைந்தளவு கவனம் செலுத்துவதே சாத்தியம்.

இலங்கையின் புதிய ஆளும் வம்சம் இந்தியாவின் பெரும்பான்மைவாத அரசியலுக்குத் திரும்பியிருப்பதையும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் சீனாவுடன் இந்தியாவிற்குத் தகராறுகள் இருப்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறது. ராஜபக்ஷாக்கள் டில்லிக்கு எதிரிடையான ஒரு சக்தியாக பெய்ஜிங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்பது அலட்சியப்படுத்த முடியாத ஒரு யதார்த்தமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38