இந்தியாவை முந்தி ஓடும் சீனா

10 Aug, 2020 | 05:54 PM
image

-சுபத்ரா

கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பில் உள்ள ஷங்ரிலா விடுதியில் நடந்த ஒரு நிகழ்வில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவ அதிகாரிகளின் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

தற்போது சுங்கப் பணிப்பாளராக உள்ளவரும், இறுதிக்கட்டப் போரில் 57 ஆவது டிவிசனின் பிரிகேட் தளபதியாகவும், பின்னர் பிரதி கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டவருமான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவே இந்த சங்கத்தின் அழைப்பாளராகவும் முதலாவது தலைவராகவும் இருக்கிறார்.

பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ஹூ வெய் ஆகியோர் இந்த நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரியின் சார்பில், இந்த சங்கம் ஆரம்பிப்பதற்கு வரவேற்புத் தெரிவித்து, மேஜர் ஜெனரல் சூ ஹியூய், றியர் அட்மிரல் காவோ ஜியான்கி ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் இந்தக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

அதில், இரண்டு நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையில் தந்திரோபாய தொடர்பாடலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை – சீன இராணுவங்களுக்கிடையிலான நெருக்கமும் உறவுகளும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவே அந்த உறவுகளின் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

சீனா பல்வேறு வழிகளில் இலங்கையின் வரலாற்று ரீதியான கூட்டாளி என்று குறிப்பட்டிருந்த அவர், அண்மைக்காலத்தில் சர்வதேச ரீதியாக இலங்கை கடினமான நிலையில் இருந்தபோது சீனா உதவியாக இருந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒத்துழைப்பை இலங்கை மறந்து விட முடியாது என்றும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போரின் போது எதிர்உத்திகளை திட்டமிடுவதற்கு களமுனைத் தளபதிகளுக்கு நிபுணத்துவ பயிற்சிகளை சீனா வழங்கியது என்றும் அவர் கூறியிருந்தார்.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் உறவுகளை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு செல்லும் என்றும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்தியிருந்த மேஜர் ஜெனரல் ஜிபி ரவிப்பிரிய, அதிகளவானோருக்கு இராணுவ பயிற்சிகளை அளித்து இலங்கை இராணுவத்துக்கு எப்போதும் உதவ சீனா தயாராக இருந்து வந்துள்ளது என்று கூறியிருந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 1985 ஆம் ஆண்டு பீஜிங்கில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்த போதும், 2001ஆம் ஆண்டில் இருந்து தான், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 75இற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருக்கிறார்கள்.

இவர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சங்கத்தை உருவாக்குவதில் சீன துதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்  Colonel Chang Dong உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கு முக்கியமானது.

புலிகளுக்கு எதிரான போருக்கான உத்திகளை திட்டமிடுவதில், சீனாவின்ன் பங்கு முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது என்பது, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் உரையில் இருந்து உணர முடிகிறது.

இரண்டு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் பிணைப்பை வலுப்படுத்துவதற்காகவே, இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முப்படை அதிகாரிகளும் அங்கு பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் தயா ரத்நாயக்க, ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இறுதிப் போரில் முக்கிய பங்கு வகித்த மேஜர் ஜெனரல் சுராஜ் பன்சஜய, மேஜர் ஜெனரல் றோகண பண்டார உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இலங்கை இராணுவத்துக்குள் தமக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க முயன்றிருக்கிறது சீனா.

வெளிநாட்டு இராணுவ பல்கலைக்கழகங்கள், பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை படை அதிகாரிகள் பயற்சி பெற்று வந்துள்ள போதும், வெளிநாடு ஒன்றில் பயிற்சி பெற்ற முன்னாள் படை அதிகாரிகளைக் கொண்ட சங்கம் ஒன்று இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Image

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், இந்திய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள கப்டன் விகாஷ் சூட் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷஸாந்த உலுகெத்தென்ன அகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

Image

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டிருந்த்து.

எனினும், இந்திய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்புகளுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சோ, அதிகாரிகளோ முக்கியத்துவம் அளிக்கவில்லை.

Image

இந்தியாவில் உள்ள பயிற்சி முகாம்களில் வெளிநாட்டுப் படையினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதம் இலங்கைப் படையினருக்கே ஒதுக்கப்படுகிறது என்று இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் 800 இலங்கை இராணுவத்தினர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இளநிலை அதிகாரிகளுக்கான பயிற்சிகளை இந்தியாவின் பயிற்சி முகாம்களில் பெற்றுக் கொள்வதை இலங்கை இராணுவ அதிகாரிகள் அதிகளவில் விரும்புவது வழக்கம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பெருமளவு இலங்கைப் படை அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்கள்.

முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜே.ஈ.டி பீற்றர், மேஜர் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க, ஜெனரல் ஹமில்டன் வணசிங்க, மேஜர் ஜெனரல் நளின் செனிவிரத்ன, முன்னாள் விமானப்படைத் தளபதிகான எயர் சீவ் மார்ஷல் வோல்டர் பெர்னான்டோ, எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்க, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான முக்கிய தளபதிகள் புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் முன்னர் பயிற்சி பெற்றவர்கள் தான்.

இவர்கள் பல தசாப்தங்களாக அங்கு பயிற்சிகளைப் பெற்ற வருகின்ற போதும், அங்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளுகிடையில் ஒரு தொடர்பு கிடையாது. அவர்களுக்குள் ஒரு சங்கமும் இல்லை.

ஆனால், சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சிகளைத் தொடக்கியுள்ள -இதுவரை 75 அதிகாரிகளுக்கு மாத்திரம் பயிற்சிகளை அளித்துள்ள சீனாவின் தேசிய பாதுகப்பு பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது,

இந்த ஒருங்கிணைப்பு இராணுவ ரீதியாக முக்கியமானது. இலங்கையை விட சீனாவுக்கு இன்னும் அதிக பலனைத் தரக் கூடியது.

ஓய்வுபெற்ற பல படை அதிகாரிகள் இப்போது அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஓய்வில் இருக்கிறார்கள்.

இவ்வாறான சங்கங்களை உருவாக்குவதன் மூலம் சீனா தனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள மாத்திரம் முற்படவில்லை. தமக்கான தேவைகளையும் நிறைவெற்றிக்கொள்ளப் போகிறது.

ஆனால் இந்தியா இதுபோன்ற புத்திசாலித்தனமான நகர்வுகளை எடுப்பதில் இப்போதும் பின்னால் தான் நிற்கிறது.

இந்தியப் பெருங்கடலில் பிராந்திய ஆதிக்கத்துக்காக சீனாவும் இந்தியாவும் முட்டி மோதுகின்ற போதும், இலங்கை போன்ற நாடுகளை வளைத்துப் போடுவதற்கு சீனா பல்வேறு உத்திகளை கையாளுகிறது என்பதை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, சங்கமும் உறுதி செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38