(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பான பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கப்படும். யாருக்கும் அநீதி ஏற்படாத வகையில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உரிய முடிவினை அறிவிப்பார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பொதுத் தேர்தலின் பின்னர் ஆளுங்கட்சியில் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுவது மிகக் குறைவாகும். காரணம் ஆளுங்கட்சி அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் புத்திஜீவிகள் போன்றோரையே தேசிய பட்டியலில் நியமிக்கும்.

ஆனால் எதிர்க்கட்சி தேசிய பட்டியலுக்கூடான ஆசனங்களை பகிரும் போது அரசாங்கத்திற்கு சவாலாக அமையக் கூடியவாறு தம்மை பலப்படுத்திக் கொள்வதற்காக அரசியல்வாதிகளுக்கே வாய்ப்பளிக்க எதிர்பார்க்கப்படும். வரலாற்றில் இவ்வாறான சம்பவங்களே பெருமளவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி  சார்பில் போட்டியிட்டு இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பயணித்த 27 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இன்று சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை  சந்தித்தார். நாளை தோல்வியடைந்த வேட்பாளர்களை சந்தித்து பேசவுள்ளார். எனவே இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் உரிய தீர்மானத்தை அறிவிப்பார்.

கேள்வி : நீங்கள் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளீர்களா ?

பதில் : நான் அறிந்தவரை அவ்வாறு தான் நினைக்கின்றேன். எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் ஏற்படாது என்று எண்ணுகின்றேன் என்றார்.