வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமையவேண்டும்  என்பது தொடர்பான   இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா ஒப்படைத்துள்ளார்.

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உகந்ததாக கூறப்படும் ஓமந்தையில் காணப்படும் இரு இடங்களையும், தாண்டிக்குளத்திலுள்ள இடத்தையும் நேற்று முன்தினம் வவுனியாவுக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா நேரில் பார்வையிட்டிருந்தார்.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் மாவை.சேனாதிராஜா எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. 

இச்சந்திப்பின்போது ஓமந்தையில் ஏற்கனவே அடையாளமிடப்பட்ட காணியில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்துரைத்ததையடுத்தே மேற்கண்ட பொறுப்பு அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இச்சந்திப்புக் குறித்து வடக்கு முதல்வர் கூறுகையில், 

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் நேற்று மாவை.சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். அதன்போது பல விடயங்கள் குறித்து பேசப்பட்டிருந்தன. சிலவிடயங்கள் குறித்து அவருக்கு விளக்கிக் கூறியிருந்தேன்.

20கோடி திரும்பி செல்லக்கூடாது

வடமாகாணத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக 20கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதி மீளத்திரும்பக்கூடாது என்பதில் நான் உறுதியாகவிருக்கின்றேன். எனினும் இந்நிதியில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையமானது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே அமையவேண்டும் என்பதில் ஆகக்கூடுதலான கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 

ஓமந்தையே சிறந்தது

இவ்வாறிருக்கையில் 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் அப்போதைய ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்திற்கு அண்மையாகவுள்ள காணியிலேயே அமைப்பதென தீர்மானிக்கப்பட்டு;ள்ளது.

அதனையடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான சர்ச்சைகள் எழுந்தபோது அதுதொடர்பாக ஆராய்வதற்காக நிபுணர்குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு நன்மைகள், தீமைகள், எதிர்கால திட்டம், உள்ளிட்ட பலகோணங்களில் ஆராய்ந்து தனது நீண்ட அறிக்கையை வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் இப்பகுதியே பொருத்தமான இடமென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஓமந்தை ஒரு கிராமமாகும். அப்பிரதேசம் எந்தவொரு நகரத்திற்குள்ளும் அடங்கவில்லை. இதனால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறப்படவேண்டுமென்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்ட வேளையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருக்கும் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸுடன் எனது செயலாளர் தொடர்பு கொண்டிருந்தார். ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனைத்து விதமான அனுமதிகளும் எப்போதோ பெறப்பட்டு அந்த இடம் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மிக நீண்டகாலமாக தயார் நிலையிலுள்ளது. இதற்கு மேலதிகமாக எந்தவித அனுமதியும் பெறப்படவேண்டிய தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேநேரம், ஓமந்தைப் பகுதியில் இந்த மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பாக வடமாகாண காணி ஆணையாளரிடமிருந்தும் முழுமையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக எவ்வேளையிலும் கையளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இதில் எவ்வித சிக்கல்களும் இல்லையெனவும் அவர் எனக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தவறான தெரிவுகள்  

அவ்வாறான நிலையில் தாண்டிக்குளத்தை தெரிவு செய்வதானது தவறானது என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாண்டிக்குளத்தில் அமைப்பதால் விவசாயிகள் அதிகளவில் நன்மை பெறுவதைக் காட்டிலும் வேறொரு தரப்பினரே நன்மை பெறவுள்ளனர். அதேநேரம் ஓமந்தையில் காணப்படும் மாணிக்கவளவு காணியை தெரிவு செய்யுமாறு கோரப்படுகின்றது. உண்மையிலேயே மாணிக்கவளவு காணியை தெரிவு செய்வதில் இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றன. 

முதலாவதாக அந்தக்காணியானது பிரதான வீதிக்கு அண்மையில் காணப்படுகின்றது. ஆகவே அக்காணியில் இந்நிலையம் அமைக்கப்படுமாகவிருந்தால் வாகன நெரில் உட்பட சில அன்றாட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.இரண்டாவதாக அக்காணியை உரிமையாளரிடத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு குறைந்தது மூன்றுமாத காலம் தேவைப்படும். அதுதொடர்பாக காணி ஆணையாளரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.  எனவே இப்பகுதிகள் பொருத்தமற்றவையாகவே நான் கருதுகின்றேன். 

விவசாயக் கல்லூரி 

மாணவர்கள் கோரிக்கை

அதேநேரம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாய கல்லூரி மாணவர்கள் எனக்கு கடிதம் மூலம் கோரிக்கை  ஒன்றை விடுத்துள்ளார்கள். அவர்களுடைய கல்லூரிக்கு எதிராக இந்த மத்திய நிலையம் அமைவதால் அப்பகுதியில் கல்விசார் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை அவர்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்றனர். 

அதேநேரம் விவசாய கல்லூரியை அண்மித்ததாக விதை உற்பத்தி பண்ணையும் காணப்படுகின்றது. ஆகவே அதனையும் உரிய முறையில் பாதுகாக்கவேண்டியுள்ளது. எனவே அவற்றையும் கவனத்தில் கொண்டுள்ளேன். 

கருத்துக்கணிப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தின்போது வடக்கு மாகாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களிடத்தில் கருத்துக்கணிப்பு பெறுவதென தீர்மானிக்கப்பட்டது. 

அதன்பிரகாரம் தற்போது வரையில் சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓமந்தையிலேயே இப் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டுமென தெரிவித்துள்ளனர். அதேபோன்று பத்து மாகாண சபை உறுப்பினர்களும் ஓமந்தையே சரியான தெரிவு என கருத்துக்களை கூறியுள்ளனர்.

நான் உறுதியாகவுள்ளேன்

எனவே ஏற்கனவே வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்திற்கு அண்மையாக அமைந்துள்ள காணியே சிறந்த தெரிவு என்பதில் உறுதியாகவுள்ளேன் என்றார்.